நீர்நிலையில் குப்பையை கொட்டியதால் வந்த வினை; பின்னணி பாடகருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

7


திருவனந்தபுரம்: கொச்சி காயல் பகுதியில் கழிவுகளை கொட்டியதற்காக பின்னணி பாடகர் எம்.ஜி. ஸ்ரீகுமாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


கொச்சி காயல் பகுதி என்பது, கேரள கடற்கரையில் அமைந்துள்ள ஒரு உப்பங்கழிப் பகுதி ஆகும். இது கால்வாய்கள், ஏரிகள் மற்றும் ஆறுகளின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில், கொச்சி காயல் பகுதியில் கழிவுகளை கொட்டியதற்காக பின்னணி பாடகர் எம்.ஜி.ஸ்ரீகுமாருக்கு எர்ணாகுளத்தில் உள்ள முலவுகாடு பஞ்சாயத்து ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.


அவரது வீட்டிலிருந்து குப்பைகள் தண்ணீரில் வீசப்படும் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு சுற்றுலாப் பயணி இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் ராஜேஷை டேக் செய்தார். இதையடுத்து, பஞ்சாயத்து அதிகாரிகள் வீடியோவை மதிப்பாய்வு செய்து, தேதி, நேரம் மற்றும் இடத்தை சரிபார்த்தனர்.



ஸ்ரீகுமாரின் வீட்டிலிருந்து கழிவுகள் கொட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதை கொட்டிய நபரை அடையாளம் காண முடியவில்லை. பஞ்சாயத்து சட்டப்படி பின்னணி பாடகர் எம்.ஜி. ஸ்ரீகுமாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. எம்.ஜி.ஸ்ரீகுமார் திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். கழிவுகளை அகற்றுவதற்கு அவரது வீட்டு ஊழியர்கள் பொறுப்பேற்றிருக்கலாம். ஆனால் நோட்டீஸ் கிடைத்த உடனேயே பாடகர் எம்.ஜி. ஸ்ரீகுமார் அபராதத்தை செலுத்தினார்.


பொது இடங்களை மாசுபடுத்தும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் வகையில், பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணில் (94467 00800) புகார் அளிக்கலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது. சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுவது குறித்து பொதுமக்களைப் புகாரளிக்க ஊக்குவித்துள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக, கேரளா அமைச்சர் ராஜேஷ், புகார் தெரிவித்த சுற்றுலா பயணிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement