வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்

4

பெங்களூரு: வெப்ப அலை காரணமாக கர்நாடகாவில் 9 மாவட்டங்களுக்கு மட்டும் அரசு அலுவலக நேரத்தை மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, பல்வேறு இடங்களில், வெப்ப அலையும் வீசி வருகிறது. இதனால், பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

ஏப்., முதல் ஜூன் வரையில் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாத நிலையில், அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றம் செய்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை இருந்து அலுவலகப் பணி நேரத்தை, காலை 8 மணி முதல் மதியம் 1.30 மணியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெல்லாரி, பிதர், கலபுராகி, கோப்பால், ராய்சூர், யாத்கிர், விஜயநகர், விஜயபுரா மற்றும் பாகல்கோட் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement