இந்திய என்.ஜி.ஓ.,க்களுக்கு நிதி வழங்க குறுக்கு வழி! சோரஸ் அறக்கட்டளை தில்லாலங்கடி அம்பலம்

10


புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான கொள்கை உடைய அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், இங்குள்ள சில என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா நிறுவனங்களுக்கு குறுக்கு வழிகளை பயன்படுத்தி, கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.


ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் பிறந்த, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், ஓ.எஸ்.எப்., எனப்படும் 'ஓபன் சொசைட்டி பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளை வாயிலாக, உலகின் பல நாடுகளில் பல திட்டங்களுக்கு நிதி உதவி செய்து வருகிறார்.


இவர், அந்த நாடுகளின் தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளவர் சோரஸ்.

நன்கொடை



காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா தொடர்புடைய பல அமைப்புகளுக்கு, ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளை நிதியுதவி அளித்துள்ளதாக புகார்கள் உள்ளன. இவை தொடர்பாக, பார்லிமென்டிலும் கடும் விவாதம் நடந்துள்ளது.


கடந்த 2016ல், சோரசின் ஓ.எஸ்.எப்., அமைப்பை, கண்காணிப்பு பட்டியலில் மத்திய உள்துறை அமைச்சகம் சேர்த்தது. இதன்படி, முன் அனுமதி பெறாமல், இந்தியாவில் உள்ள என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு நன்கொடைகளை அள்ளிக் கொடுக்க முடியாது.


இந்தக் கட்டுப்பாடுகளை தவிர்ப்பதற்காக, ஓ.எஸ்.எப்., அறக்கட்டளை, இந்தியாவில் உள்ள தன் துணை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு, நேரடி அன்னிய முதலீடு மற்றும் ஆலோசனை கட்டணம் என்ற பெயரில் பணத்தை அனுப்பியுள்ளது. அந்தப் பணம், இங்குள்ள அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இது, 'பெமா' எனப்படும் அன்னிய செலாவணி நிர்வாகச் சட்டத்துக்கு எதிரானது. இது தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில், சோரசின் அறக்கட்டளை வாயிலாக பலன் பெற்ற அரசு சாரா அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு சொந்தமான, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள எட்டு இடங்களில், அமலாக்கத்துறை கடந்த மார்ச் 18ல் அதிரடி சோதனை நடத்தியது.

இந்த சோதனைகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், சோரசின் அறக்கட்டளை, குறுக்கு வழிகளை பயன்படுத்தி, இங்குள்ள என்.ஜி.ஓ.,க்களுக்கு பல வகைகளில் பணம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

சந்தேகம்

இது குறித்து, அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:



சோரசின் ஓ.எஸ்.எப்., மற்றும் முதலீட்டு நிறுவனமான இ.டி.எப்., எனப்படும் பொருளாதார வளர்ச்சி நிதி ஆகியவற்றின் வாயிலாக, இங்குள்ள சில நிறுவனங்களுக்கு முதலீடுகளாகவும், சேவை வழங்கியதற்கான கட்டணமாகவும் வழங்கப்பட்டுள்ளது.


'ரூட்பிரிட்ஜ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், ரூட்பிரிட்ஜ் அகாடமி பிரைவேட் லிமிடெட், ஏ.எஸ்.ஏ.ஆர்., சமூக தாக்க ஆலோசனை நிறுவனம்' ஆகியவற்றுக்கு, அன்னிய நேரடி முதலீடு அல்லது சேவை கட்டணமாக பணம் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த 2020 - 2021 மற்றும் 2023 - 2024 நிதியாண்டுகளுக்கு இடையே, இந்த மூன்று இந்திய நிறுவனங்களுக்கும் 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


இந்த நிறுவனங்கள் வாயிலாக, என்.ஜி.ஓ.,க்களுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


எவ்வித சேவைகளும் வழங்காத நிலையில், சேவை கட்டணம் என்ற பெயரில், இந்த நிறுவனங்களுக்கு சோரசின் அறக்கட்டளை பணம் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.


அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை மீறும் வகையில், குறுக்கு வழியில் இவ்வாறு பணம் அனுப்பப்பட்டுள்ளது.


இதில் இருந்து சமூக நலனுக்கு உதவுவதற்காக, என்.ஜி.ஓ.,க்களுக்கு பணம் அனுப்பப்படவில்லை என்பது தெரிய வருகிறது. அதனால், எதற்காக இந்த பணம் அனுப்பப்பட்டது என்பதில் பல சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement