ரூ.29 கோடியில் கட்டப்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படுமா: சில்லரை பணிகளால் 'அம்போ'ன்னு நிற்கிறது

புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 29 கோடி ரூபாயில் கட்டி எழுப்பப்பட்டுள்ள புது பஸ் ஸ்டாண்ட் பணிகள் அனைத்தும் முடிந்தும் கூட சில்லரை பணிகளால் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் முதல்வர் நேரடியாக தலையிட்டு திறப்பு விழா காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி புதிய பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 29 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, ஜூலை 16ம் தேதி முதல் ஏ.எப்.டி., திடலுக்கு புது பஸ் ஸ்டாண்ட் தற்காலிகமாக மாற்றப்பட்டது. அனைத்து பஸ்களும் ஏ.எப்.டி., திடலில் இருந்து இயங்கப்பட்டு வருகின்றது. கடந்த அக்டோபர் மாதமே புது பஸ் ஸ்டாண்ட் பணிகளை முடித்து திறக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், தொடர்ந்து பெய்த மழை காரணமாக பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் தள்ளிபோனது . இதுபோல் பல முறை திறக்க முயற்சித்தும் புது பஸ் ஸ்டாண்ட் இதுநாள் வரை திறக்கப்படவில்லை.

அதேவேளையில், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் புழுதி பறக்கின்றது. இதனால் பஸ் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் ஏ.எப்.டி,ல் பஸ் ஸ்டாண்ட்டில் நரக வேதனையை அனுபவிக்க வேண்டும் என புலம்பியபடி பயணிகள் செல்கின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி பணி புது பஸ் ஸ்டாண்ட்டில் 95 சதவீதம் முடிந்துவிட்டது. குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு என சில்லறை பணிகள் பாக்கியுள்ளது.

அதிகாரிகள் சில மணி நேரம் செலவிட்டு ஆய்வு செய்து, ஒரு உத்தரவிட்டால் போதும், மறுநாளே புது பஸ் ஸ்டாண்ட் ரெடியாகி விடும்.

ஆனால் அரசு அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.

இதனால் அக்டோபர் மாதத்தில் இருந்தே புது பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட உள்ளது என புலி வருது கதையாய் கதைவிடப்பட்டு வருகின்றது.

அடுத்து புது பஸ் ஸ்டேண்ட் கடைகள் குறித்த ஐகோர்ட் உத்தரவினை காரணம் காட்டியும் புது ஸ்டாண்ட் திறப்பினை தள்ளி வைத்து வருகின்றனர்.

இதுவும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. கடைகளை ஆன்லைனில் ஏலம் விட தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதே தவிர, புது பஸ் ஸ்டாண்ட் திறக்க கூடாது என்று எங்கும் சொல்லவில்லை. அப்படி சட்ட சிக்கல் இருந்தால் சட்ட துறையினை நாடி, இருக்கலாம்.

அதேபோல், தனியார் கடைகள் வரும் வரை கூட காத்திருக்காமல், தற்காலிகமாக அரசு கடைகளை நிறுவிகூட பஸ் ஸ்டாண்ட்டை திறந்து இருக்கலாம். ஆனால் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பதற்கான மாற்று திட்டத்தை பற்றியும் யோசிக்காமல் மவுனமாக இருந்து வருகின்றனர்.

அதிகாரிகளுக்கு புது பஸ் ஸ்டேண்ட் திறப்பதற்கான எண்ணம் துளியும் இருப்பதுபோல் தெரியவில்லை. கடைகளை ஏலம் விட்ட பிறகு, தனியார் கடைகளை நிறுவிய பிறகு புது பஸ் ஸ்டாண்ட் மெல்ல திறக்கலாம் என்பதே அவர்களின் கணக்காக உள்ளது.

கடைகளுக்காக புது பஸ் ஸ்டேண்ட் திறப்பு விழா காணாமல் காத்திருக்கலாமா என்பதே மக்களின் சுளீர் கேள்வியாக உள்ளது. பஸ் ஸ்டேண்ட் திறப்பு விஷயத்தில் எதிர்கட்சிகளும் எந்த கேள்வியும் எழுப்பாமல் ஆழ்ந்த துாக்கத்தில் உள்ளன.

இதுவும் நிற்கின்றது



புதுச்சேரி -கடலுார் சாலையில் ஏ.எப்.டி., திடல் ரயில்வே கிராசிங்கில் ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதியை புதுச்சேரி அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.55 கோடி, தென்னக ரெயில்வேயின் ரூ.17 கோடி பகிர்ந்து கொண்டுள்ளன. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி பூமி பூஜை போடப்பட்டது.

தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மீண்டும் பழைய இடத்திற்காக மாற்றாததால் இந்த பணியும் துவங்காமல் நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதற்குமேலும் பொறுமை காக்காமல் புது பஸ் ஸ்டாண்ட் விஷயத்தில் முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும். அனைத்து துறைகளையும் ஒரே நேரத்தில் அழைத்து பேசி, சில்லறை பணிகளை முழு வீச்சில் முடித்து போர்க்கால அடிப்படையில் திறக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போ தை....

இப்போ சித்திரை..... புது பஸ் ஸ்டாண்ட் தை மாதம் திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டது. இப்போது சித்திரை மாதம் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், இ.சி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் அடிக்கல் நாட்டிய பிறகு திறக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சித்திரை மாதத்திலாவது புது பஸ் ஸ்டாண்ட்டிற்கு வழி பிறந்தால் நல்லது.

Advertisement