திறக்கப்படாத தாவரவியல் பூங்கா பேட்டரி கார்களில் ஆடியோ செட் திருட்டு தண்டவாளங்கள் துருப்பிடித்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி

புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு, திறக்கப்படாத புதுச்சேரி தாவரவியல் பூங்கா பேட்டரி கார்களில் ஆடியோ செட்டுகள் திருடு போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி தாவரவியல் பூங்கா 200 ஆண்டுகளுக்கு முன்பு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'ஜார்ஜஸ் கெரார்ட் சாமுவேல் பெரோட்டட்'என்பவரால் உருவாக்கப்பட்டது.

22 ஏக்கர் பரப்பளவில் 3,500 மரங்களுடன் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த பூங்கா அமைந்துள்ளது.

தற்போது நகர பொலிவுறு திட்டத்தின் கீழ் புதுச்சேரி சுதேசி மில் வளாகம் மற்றும் தாவரவியல் பூங்கா ஆகியவை ரூ.13 கோடி செலவில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

இதில், தாவரவியல் பூங்கா புதுப்பிக்கும் பணிகள் முடிந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஆனால் திறப்பு விழா நடத்தாமல் பூட்டி கிடக்கிறது.

இந்நிலையில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பூங்காவை சுற்றி பார்க்க வசதிக்காக நான்கு பேட்டரி கார்களும் மற்றும் புதிதாக பேட்டரியில் இயங்கும் ஒரு சிறுவர் உல்லாச ரயிலும் வாங்கப்பட்டு பூங்காவில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதில் பேட்டரி கார்களில் பாடல்களை கேட்டுக் கொண்டே பயணிக்கும் வசதி உள்ளது. பூங்காவில் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பேட்டரி கார்களில் இருந்த ஆடியோ செட்டுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பூங்கா ஒப்படைக்கப்பட்ட பின்பே ஆடியோ செட்டுகள் திருடு போனதால் பணிகள் மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனம் எங்களுக்கும் வாகனத்திற்கு சம்பந்தமில்லை என்று கைவிரித்து விட்டது.

மேலும் சிறுவர் உல்லாச ரயிலுக்காக அமைக்கப்பட்டுள்ள தண்டவாளங்கள் துருப்பிடித்த நிலையில் இருந்து வருகிறது.

பூங்கா திறப்பதற்கு முன்பாகவே வாகனங்களில் பொருட்கள் திருட்டு, தண்டவாளம் துருப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளது பூங்கா ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement