அண்ணாசாலையில் தறிக்கெட்டு ஓடிய கார் மோதி ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்

சென்னை,நந்தனம், எஸ்.எம்.,நகர், 'டி' பிளாக்கை சேர்ந்தவர் பாபு, 40. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், தேனாம்பேட்டை தீயணைப்பு அலுவலகம் எதிரே, நடைபாதையில் அமர்ந்து இருந்தார்.

அப்போது, பாரிமுனை நோக்கி அதிவேகமாக சென்ற ஹூண்டாய் ஐ-20 கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையில் அமர்ந்து இருந்தோர், டீக்கடையில் நின்று கொண்டிருந்த மூவர் மீது மோதி நின்றது.

இதில், நடைபாதையில் அமர்ந்து இருந்த பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரித்தீஷ் போக்ரா, 45 என்பவருக்கு, தோல் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

விக்ரம், 28, தருண் சொலாங்கி, 31 ஆகிய இருவரும், சிராய்ப்பு காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கிகிச்சை பெற்ற வருவதும் தெரியவந்தது.

விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் அபிஸ் அகமது, ராயப்பேட்டையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

விபத்து ஏற்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கார் ஓட்டுனர் அபிஸ் அகமது, 52, சிகிச்சைக்கு பின் கைது செய்யப்படுவார் என, போலீசார் தெரிவித்தனர். இவர், தனியார் எச்.டி., கொரியர் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இச்சம்பவத்தால், அண்ணாசாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

***

Advertisement