மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் விழுதுகள் சேவை மையம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 11 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகளில் என 15 இடங்களில் விழுதுகள் சேவை மையம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் விழுதுகள் 'ஒன் ஸ்டாப் சென்டர்' அமைக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குவதே இதன் நோக்கம். உலக வங்கி நிதி உதவியுடன் இவை அமைக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறன் கொண்டவர்களாக 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பயனடையும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, பரமக்குடி அரசு மருத்துவமனை மற்றும் நகராட்சிகளான ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இடங்களில் விழுதுகள் மையம் அமைக்கப்படுகின்றன.

இம் மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வி, கண் பார்வை அளவியல், கேட்டல், பேச்சு பயிற்சி, பிசியோதெரபி, செயல்முறை, உளவியல் சிகிச்சை ஆகிய சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படும். இதற்காக வல்லுநர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த மையம் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா, நவீன கழிப்பறை உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 11 ஒன்றியங்களில் உள்ள ஆரம்ப சுகதார நிலையங்களில் விழுதுகள் மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.

ஜூன் அல்லது ஜூலையில் இந்த மையங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறினர்.------

Advertisement