அரசு டவுன் பஸ் டிஜிட்டல் போர்டு ஊர் பெயர் தெரியாததால் குழப்பம்

மானாமதுரை: தமிழக அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த எத்தனையோ வழி இருக்கும் போது அரசு டவுன் பஸ்களில் வழிகாட்டும் டிஜிட்டல் போர்டுகளில் விளம்பரப்படுத்துவது நியாயமா என பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
மானாமதுரையில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் டிஜிட்டல் போர்டுகளில் ஊர்களின் பெயர்களுக்கு பதிலாக தி.மு.க., அரசின் திட்டமான மகளிர் விடியல் பயணம் என மிகப் பெரிய எழுத்திலும் ஊர்களின் பெயர் கீழே மிக சிறிய எழுத்திலும் இருப்பதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து சிவகங்கை,தாயமங்கலம், இளையான்குடி,பரமக்குடி,வேதியரேந்தல், நரிக்குடி,மல்லல்,காளையார் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பழுதான அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. சில நேரங்களில் நடுவழியில் பழுதாகி ஆங்காங்கே நின்று விடுகிறது. இப் பஸ்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதனை தொடர்ந்து மானாமதுரை பகுதியில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளுக்கு புதிய டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் பஸ்களின் முன்புறம் ஊர் பெயர் டிஜிட்டல் போர்டில் வரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இரவில் பயணிகள் தெளிவாக பார்த்து பஸ் ஏறி சென்று வருகின்றனர். நேற்று சிவகங்கையில் இருந்து மானாமதுரை வழியாக வேதியரேந்தல் வந்த அரசு டவுன் பஸ்சின் முன்பக்க டிஜிட்டல் போர்டில் தி.மு.க., அரசின் திட்டமான மகளிர் இலவச பயணம் என்ற எழுத்து மிகப்பெரியதாகவும், ஊரின் பெயர் மிகவும் சிறிதாகவும் தெரிந்ததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.