மலக்குடல் புற்றுநோய் கண்டறிய இன்று இலவச சிறப்பு பரிசோதனை
கோவை; பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியும் திட்டத்தின் கீழ், கோவை அரசு மருத்துவமனையில், இன்று சிறப்பு பரிசோதனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து, பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு நடத்தப்படவுள்ளது.
தொற்றாத நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கோவையில் முன்மாதிரியாக, 'பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய் முன்கூட்டியே, கண்டறியும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், மலக்குடல், பெருங்குடல் ஆரம்ப அறிகுறிகள் குறித்து டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக, கோவை அரசு மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், நோய் அறிகுறியுள்ளதாக பரிந்துரை செய்யப்படுபவர்களுக்கு, அலைக்கழிப்பு இன்றி பரிசோதனை செய்யப்படுகிறது.
கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இணை பேராசிரியர் மற்றும் பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியும் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் டாக்டர் செல்வராஜ் கூறியதாவது:
ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், செவிலியர்களுக்கு இந்நோய் அறிகுறி சார்ந்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிகுறியுள்ளவர்கள், அலைக்கழிக்கப்படாமல் தாமதமின்றி, உடனுக்குடன் பரிசோதனை செய்யும் வகையில், அரசு மருத்துவமனையில், வியாழன் தோறும் சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
அதன்படி, நாளை(இன்று) காலை 9:00 முதல் 10:00 மணி வரை, சிறப்பு முகாம் வெளிநோயாளிகள் பிரிவு கட்டடத்தில் முதல் தளத்தில் நடைபெறவுள்ளது. ஆரம்ப சுகாதார மையங்களில் பரிந்துரைக்கப்பட்டவர்கள், தவறாமல் இதில் பங்கேற்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.