அரசு நுாலகத்தில் அமர இடமில்லாமல் வாசகர்கள் தவிப்பு : கூடுதல் கட்டட வசதி இல்லாததால் நெருக்கடி

தேவகோட்டையில் 60 ஆண்டுகளாக அரசு நுாலகம் செயல்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டடத்தில் இயங்கிய நுாலகம் தற்போது இரண்டு அறைகள் கொண்ட சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேல் புத்தகங்கள் இருக்கின்றன.வாடகை கட்டடத்தில் இயங்கும் போது நாளிதழ் வாசிக்க ஒரு பகுதி, புத்தகங்கள் படிக்க ஒரு பகுதி என இருந்தது.

தற்போது இயங்கும் நுாலகத்தில் ஒரு அறையில் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.40 பேர் வரை அமர்ந்து படிக்கும் வகையில் இங்கு மேஜைகள், சேர்கள் போடப்பட்டு வாசகர்கள் படித்து வந்தனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பே வாசகர் வட்டத்தினர் கூடுதல் கட்டடம் கட்டித் தருமாறு பல முறை கோரிக்கை வைத்தனர். ஆனால் கூடுதல் கட்டடம் கட்ட அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புத்தகங்களை நகல் எடுக்க வசதியாக மிஷின், இன்டர்நெட் வசதி எல்லாம் இருந்தது. அந்த மிஷின் பழுதாகி தற்போது பரண் மேல் கிடக்கின்றன.

இடப்பற்றாக்குறையில் வாசகர்கள் தவித்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ரேக், இரண்டு மேஜைகள் வந்ததால் வாசகர்கள் அமர்ந்து படித்த இடத்தில் உள்ள மேஜைகளை துாக்கி விட்டு அந்த இடத்தில் ரேக் அமைத்து புத்தகங்களை அடுக்கி வைத்துள்ளனர்.

நான்கு பேர் மட்டும் அமர்ந்து படிக்கும் வகையில் சிறிய டேபிள் போடப்பட்டுள்ளது. வாசகர்கள் இடமின்றி தவிக்கின்றனர். பெரும்பாலும் முதியவர்களே வந்த இந்த நுாலகத்தில் இடமில்லாததால் வர யோசிக்கின்றனர். தேவகோட்டை அரசு நுாலகத்திற்கு புதியதாக கூடுதல் கட்டடம் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

வாசகர் முன்னாள் ஆசிரியர் சுப்பிரமணியன் கூறுகையில், தினந்தோறும் நுாலகம் வந்து படித்தோம்.மற்ற நுாலகங்களை போல் நெருக்கடி இல்லாமல் அமர்ந்து படிக்க முடியவில்லை என்றாலும் வரிசையாக அமர்ந்து படிக்க இடமிருந்தது. தற்போது புதிய ரேக்குகளை வாசகர்கள் அமர்ந்து படிக்கும் இடத்தில் வைத்து புத்தகங்களை அடுக்கி விட்டனர். இடமில்லாமல் வாசகர்கள் படித்து விட்டு வெளியே வரும் வரை காத்திருந்து உள்ளே சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது என்றார்.

Advertisement