பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.

கோவையின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், ஆயிரம் ஆண்டு பழமை வாழ்ந்த கோவிலாகவும், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா, வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்தாண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 6:00 மணிக்கு, பட்டி விநாயகர் கோவிலில் இருந்து, புனித மண் எடுத்து வரப்பட்டது.

அதன்பின், கால சந்தி, உச்சிகால பூஜை, கோ பூஜை, கஜ பூஜை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, மூலமூர்த்திகள் மற்றும் உற்சவம் மூர்த்திகளுக்கு காப்பு கட்டப்பட்டது.

காலை, 9:40 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

தொடர்ச்சியாக, பன்னிரு திருமுறை பாராயணத்துடன், 16 வகை திரவியங்கள் கொண்டு, பட்டீஸ்வர பெருமானுக்கு, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா நடந்தது.

இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். பங்குனி உத்திர தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல், வரும், 8ம் தேதி, மாலை, 4:35 மணிக்கு நடக்கிறது.

Advertisement