போக்சோ குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

கோவை; போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும், இரு குற்றவாளிகள் மீது, குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

மாநகரில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், தொடர் குற்ற சம்பவங்கள், பாலியல் மற்றும் போக்சோ வழக்குகளில் தொடர்புடைய நபர்களை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, பள்ளி சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குரும்பபாளையத்தை சேர்ந்த, கோவிந்தராஜ் கிழக்கு அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல், சிங்காநல்லூரை சேர்ந்த சம்பத் என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கிழக்கு அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.

Advertisement