கருட வாகனத்தில் வீதி உலா வந்த கோதண்டராமர்

கோவை; கோவை ராம்நகர் ஸ்ரீகோதண்டராமர் கோவில் பிரம்மோற்வ விழாவை முன்னிட்டு, கோதண்டராமர் கருட வாகனத்தில், நேற்று வீதி உலா வந்தார்.
கோவை ராம்நகர் ஸ்ரீகோதண்டராமர் கோவிலில், பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. நேற்று இரவு 7:00 மணிக்கு கோதண்டராமர் கருட வாகனத்தில், எழுந்தருளி வீதி உலா வந்தார். இந்த வைபவத்தின் போது, ஏராளமான பக்தர்கள் பகவானை தரிசித்தனர்.
இது குறித்து, ஸ்ரீகோதண்டராமர் கோவில் பிரதான அர்ச்சகர் முகுந்தகிரி ஸ்ரீநிவாஸன் சுவாமிகள் கூறியதாவது:
கொடிமரம் உள்ள எல்லா கோவில்களிலும், பிரம்மோற்சவம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். இந்த உற்சவத்தின் போது, பகவான் பல விதமான வாகனங்களில் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பகவானின் கருட வாகன தரிசனம், மிகவும் விசேஷமானதாகும். பெருமாள் வைகுண்டத்தில் இருந்து, கருட வாகனத்தில் புறப்பட்டு பூமிக்கு வந்து, பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பதற்கு ஒப்பாகும்.
இவ்வாறு, அவர் கூறினார்.