'வேட்டை' நாய்களிடம் ஆடுகள் சிக்குவது ஏன்?
பொங்கலுார்; திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட கால்வாய் பாசனம் இல்லாத பகுதிகளில் தான் அதிக அளவு வறட்சி நிலவுகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரமாக வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி போன்றவை உள்ளன.
பகல் நேரங்களில் இவை விவசாயிகளின் கண்காணிப்பில் உள்ளன. திறந்த வெளியில் காடுகளில் மேயும்போது வெறிநாயால் ஒரு சிலவற்றை மட்டும் தான் வேட்டையாட முடிகிறது. இதனால், பகல் நேரத்தில் கால்நடைகளின் இறப்பு விகிதம் மிக சொற்பமே.
இரவு நேரங்களில் விவசாயிகள் கோழிகளை கூண்டிலும், ஆடுகளை பட்டியிலும் அடைத்து விட்டு வீடுகளுக்குஉறங்கச் சென்று விடுகின்றனர்.
இது 'வேட்டை' நாய்களுக்கு வசதியாக போய்விடுகிறது. ஒரே இடத்தில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகளை வேட்டை நாய்கள் எளிதாகத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
பட்டியில் பாதுகாப்பை பலப்ப டுத்தினால் இப்பிரச்னையை தீர்க்க முடியும். பட்டியை பலப்படுத்தி பாதுகாப்பாக கையாள்வதற்கு செலவு அதிகம் பிடிக்கும். இதற்கு விவசாயிகளின் பொருளாதாரம் சாதகமாக இல்லை.
முன்பு ஒவ்வொரு பட்டியிலும் பட்டி நாய்கள் காவலுக்கு இருக்கும். மூத்த விவசாயிகள் காவல் இருந்த காலமும் போய்விட்டது. இளைஞர்கள் விவசாய பணிக்கு வருவதையே விரும்புவதில்லை. ஆடு திருடர்களால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை உள்ளது.
இதனால் அவர்களும் இரவு நேரங்களில் பட்டிக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர். இதனால் ஆடுகளின் இறப்பு என்பது தொடர்கதையாக மாறி வருகிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் பட்டிகளில் வெறி நாய்களை கூண்டு வைத்து பிடிக்க அரசும் முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.