பத்திரங்களை பதிவு செய்வதற்கு புதிய நடைமுறைகள் அறிவிப்பு

4


சென்னை: சார் பதிவாளரால் மறுக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவு பெற்று வரும் பத்திரங்களை தற்காலிக எண் அடிப்படையில் பதிவு செய்ய, புதிய நடைமுறைகளை பதிவுத்துறை பிறப்பித்துள்ளது.

வீடு, மனை வாங்குவோர் தாக்கல் செய்யும் கிரைய பத்திரங்களில் குறைபாடுகள் எதுவும் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பத்திரங்களை பதிவுக்கு ஏற்க, சார் பதிவாளர்கள் மறுப்பர். சொத்து வாங்கும் நபர், சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.


அங்கும் தீர்வு ஏற்படாத நிலையில், நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலைஏற்படுகிறது.

இவ்வாறு நீதிமன்றத்தை அணுகும் நிலையில், சம்பந்தப்பட்ட பத்திரங்களை பதிவு செய்ய, நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அப்போது, இந்த பத்திரங்களை பதிவு செய்வதில், சார் பதிவாளர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்பிறப்பித்துள்ள உத்தரவு:


நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் பத்திரங்களை, நிர்வாக மாவட்ட பதிவாளரின் ஆணை பெற்று, அதன் அடிப்படையில், டி.ஐ.ஜி., பரிந்துரை பெற்ற பின், சார் பதிவாளரால் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.


அதன்பின், திட்ட ஒருங்கிணைப்பாளர் வாயிலாக, கணினியில் அந்த பத்திரம் தொடர்பான விபரங்களை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும்.


இதையடுத்து, ஏற்கனவே பதிவுக்கு மறுக்கும் போது, அந்த பத்திரத்துக்குஅளிக்கப்பட்ட தற்காலிக எண்ணை மீண்டும் ஒதுக்க, சார் பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பதிவுக்கு தற்காலிக எண் ஒதுக்கப்படாத, தானாக திரும்ப பெறப்பட்ட பத்திரங்களுக்கு, இந்த நடைமுறை பொருந்தாது.


அங்கீகாரமில்லாத மனை தொடர்பான பத்திரங்களுக்கும், இந்த நடைமுறை பொருந்தாது. இந்த நடைமுறைகளை முழுமையாக கடைபிடிக்க, மாவட்டபதிவாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement