அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகள் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

மதுரை: கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது மிக பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ., அகில இந்திய மாநாட்டில் அவர் பேசியதாவது:

தற்போது கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பது குறித்து பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசின் விளம்பரதாரர்கள் போல் செயல்பட இயலாது. அவ்வாறு செயல்பட்டால் அது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஜி.எஸ்.டி.,யை பொறுத்தவரை மாநிலங்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படுவதில்லை.

மத்திய அரசு பொது விதிகளை உருவாக்கினாலும் அதனை சுமப்பது மாநில அரசுகளாகதான் உள்ளது. கூட்டாட்சிக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைகள் அதிகரிக்கின்றன. பெரும்பாலான விஷயங்களுக்கு மாநில அரசுகள் நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு சட்ட மசோதாக்களையும் நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில் ஜனநாயகம், கூட்டாட்சியை பாதுகாக்க முன்னெடுப்பது அவசியம் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூ., அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், தி.மு.க., அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கர்நாடக உயர்கல்வி அமைச்சர் சுதாகர், மதுரை எம்.பி., வெங்கடேசன், எம்.எல்.ஏ., தளபதி பங்கேற்றனர்.

Advertisement