இடையபட்டி வெள்ளிமலை வனத்தை பல்லுயிர் தலமாக அறிவிக்க வழக்கு
மதுரை: மதுரை மாவட்டம் மேலுார் அருகே இடையபட்டி வெள்ளிமலை கோயில் வனப்பகுதியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மேலுார் அருகே தெற்கு ஆமூர் கார்த்திக் தாக்கல் செய்த பொதுநல மனு: இடையபட்டியில் வெள்ளிமலை புனித காடு உள்ளது. இது முருகனின் வடிவமான ஆண்டி கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பரப்பளவு 1500 ஏக்கர்.
தீர்வு ஏற்படாத தரிசு புறம்போக்கு நிலமாக வருவாய்த்துறை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அருகிலுள்ள 13 கிராம மக்களால் பாதுகாக்கப்படுகிறது. காட்டிற்குள் நுழையும் மக்கள் கால்களில் காலணிகளை அணிவதில்லை. 187 வகை தாவரங்கள், 98 வகை பறவைகள், 43 வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன.
பழங்காலத்திலிருந்து இடையபட்டி, தெற்கு ஆமூர், சொருக்குளிப்பட்டி மக்கள் இவ்வனத்தை பாதுகாக்க சிலரை காவலர்களாக நியமித்துள்ளனர். நெல் அறுவடைக்குபின் ஒரு பகுதியை வீடுகள் தோறும் இக்காவலர்களுக்கு வழங்குகின்றனர். வெள்ளிமலை வனப்பகுதியை பாதுகாக்க 2023 ல் இடையபட்டி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்டத்திலுள்ள அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரத்தில் 19.215 எக்டேர் பரப்பை பல்லுயிர் பாரம்பரிய தலமாக 2022 தமிழக அரசு அறிவித்தது. திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டியை (வீரகோவில்) பல்லுயிர் பாரம்பரிய தலமாக மார்ச் 27 ல் தமிழக அரசு அறிவித்தது.
அதுபோல் வெள்ளிமலையின் முக்கியத்துவம் கருதி பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க தமிழக வனத்துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு தமிழக வனத்துறை முதன்மைச் செயலர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
மேலும்
-
சுந்தரேஸ்வரர் கோவில் குளம்துார்வார ரூ.62 லட்சம் ஒதுக்கீடு
-
ரயில்வேயில் இன்ஜின் உதவி டிரைவர்கள் 1,280 பேர் பெண்கள்தமிழகத்தில் பணியில் உள்ளோர் 43 பேர்
-
பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
-
சாலையில் குவிந்துள்ள குப்பைவாகன ஓட்டுனர்கள் அவதி
-
மெட்ரோ ரயிலில் விதிமீறல்; 27,000 பேருக்கு எச்சரிக்கை
-
புதுப்பட்டி பகுதியில்சோளம் சாகுபடி