டிரம்ப் வர்த்தகப் போர் எதிரொலி: உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி

15


நியூயார்க்: உலக நாடுகளுக்கு பரஸ்பரம் வரி விதிப்பு செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.


அமெரிக்க சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் தினமும் எச்சரிக்கை விடுத்து வந்தார். கூறியபடி உலகின் 180 நாடுகளுக்கு வரி விதிப்பை அறிவித்து அமல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்தியப் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.


ஜப்பானில் நிக்கே 225 இன்டெக்ஸ், 2.8 சதவீதம், தென் கொரியாவின் கோஸ்பி இன்டெக்ஸ் 1 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஹாங்காங்கின் ஹாங் செங் இன்டெக்ஸ் 1.5 சதவீதம் சரிந்தது.

ஐரோப்பிய நாடுகளில் ஸ்டாக்ஸ் 600 இன்டெக்ஸ் 1.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் சி.ஏ.சி., 2.1 சதவீதமும், லண்டனில் எப்.டி.எஸ்.இ., 100 இன்டெக்ஸ் 1.3 சதவீதமும் சரிவை அடைந்தன.

அமெரிக்க சந்தைகளும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. டவ் பியூச்சர்ஸ் 2.5 சதவீதமும், எஸ் அண்ட் பி 500 பியூச்சர்ஸ் 5 சதவீதமும் வீழ்ச்சி கண்டுள்ளன. நாஷ்டாக் 3.3 சதவீதம் சரிந்துள்ளது.

இன்று இந்திய பங்குச்சந்தைகளும் வீழ்ச்சியை சந்தித்தன. நிப்டியில் ஐ.டி., பங்குகள் 4.21 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. ஆட்டோமொபைல் துறைக்கும் வரி விதிப்பு அமல் செய்யப்பட்டுள்ளதால், அந்த துறை பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

ஆனால், பார்மா துறைக்கு வரி விதிப்பு எதுவும் இல்லை. இதனால் அந்த துறை பங்குகள் நிப்டியில் 2.25 சதவீதம் உயர்ந்துள்ளன.

Advertisement