25 ஆயிரம் மேற்குவங்க ஆசிரியர்கள் பணிநீக்கம்; உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

9

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 25 ஆயிரம் ஆசிரியர்களின் நியமனத்தை கோல்கட்டா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.


@1brமேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரித்தது.


இது தொடர்பான வழக்கை விசாரித்த கோல்கட்டா உயர்நீதிமன்றம், ஆசிரியர்கள் 25,753 பேர் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் நான்கு வாரங்களுக்குள் அவர்களின் சம்பளத்தை 12 சதவீதம் வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதையடுத்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விசாரணை முடிவில், கோல்கட்டா உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்டவிரோதமாக நடந்த மோசடி நடைமுறைகளின் விளைவாக நியமனங்கள் நடந்ததால் அவை மோசடிக்கு சமம் என தெரிவித்துள்ளது.

முதல்வர் மம்தா பேட்டி

இந்த தீர்ப்பு குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
எங்கள் வழக்கறிஞர்கள் தீர்ப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவார்கள்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மனச்சோர்வடைந்துள்ளனர் என்பது எனக்குத் தெரியும். ஏப்ரல் 7ம் தேதி நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் அவர்களைச் சந்திப்பேன்.
மனிதாபிமான அடிப்படையில் நான் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன்.
இந்த நடவடிக்கைக்காக, பா. ஜ, என்னை சிறைக்கு கூட அனுப்பலாம்.


நான் அதற்கும் தயாராக இருக்கிறேன். ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) ஒரு தன்னாட்சி அமைப்பு. அரசாங்கமாக, அவர்களின் பணிகளில் நாங்கள் தலையிட மாட்டோம். அவர்கள் (பா. ஜ.,) ஏன் எப்போதும் மேற்கு வங்கத்தை குறிவைக்கிறார்கள்? நான் மேற்கு வங்கத்தில் பிறந்தேன். பா.ஜ., மற்றும் மத்திய அரசின் நோக்கம் எனக்குத் தெரியும். கிட்டத்தட்ட 25 ஆயிரம் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தவறு செய்த குற்றவாளிகள் அல்ல" என்றார்.

Advertisement