மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்

61

சென்னை: '' மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுக்கு ஒரே வழி கச்சத்தீவை மீட்பது மட்டுமே, '' என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இலங்கை அரசிடம் பேசி சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க வேண்டும்.


இது தொடர்பாக தமிழக சட்டசபையில் 2ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை மீட்டு வரும்படி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.


கடந்த ஆண்டு 530 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 3 மாதத்தில் 147 மீனவர்களை கைது செய்யப்பட்டு உள்ளனர். மாநில அரசின் அனுமதியின்றி கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்து போட்டது. கடந்த 1974 ம் ஆண்டு இதற்கு எதிராக கருணாநிதி தீர்மானம் போட்டார். அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி கண்டன தீர்மானம் நிறைவேற்றினார். மத்திய அரசின் முடிவை எதிர்த்து 1974 ஆக.,21ல் சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


1991, 2013, 2014ம் ஆண்டுகளிலும் தமிழக சட்டசபையில் இதேபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு ஒரே வழி கச்சத்தீவை மீட்பது மட்டுமே. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement