காய்ச்சல் பரவலை தடுக்க ஏடூரில் மருத்துவ முகாம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் கிராமத்தில் பரவி வரும் காய்ச்சலால், அந்த கிராமத்தை சேர்ந்த சுரேஷ், 46, என்பவர், கடந்த, 31ம் தேதி உயிரிழந்தார். அடுத்தடுத்து மேலும் பலர் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

உடனடியாக ஏடூர் கிராமத்தில் சிறப்பு மருத்துவ மற்றும் சுகாதார முகாம் மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெயியானது.

இந்த சூழலில், ஏடூர் கிராமத்தில் நேற்று மருத்துவ மற்றும் சுகாதார குழுவினர் முகாமிட்டு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.

வட்டார மருத்துவ அலுவலர் தீபாலட்சுமி தலைமையில் நடந்த முகாமில், கிராம சுகாதார செவிலியர்கள், 30 பேர் வீடு வீடாக சென்று, காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். காய்ச்சல் கண்டறியப்பட்ட நபர்களுக்கு, பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினர்.

சுகாதார ஆய்வாளர்கள் தலைமையிலான, 20 துாய்மை பணியாளர்கள், கிராமம் முழுதும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் மருத்துவ மற்றும் சுகாதார குழுவினர், டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்கள், அவை உற்பத்தியாகும் இடங்கள், அவற்றை அழிப்பது குறித்து ஏடூர் கிராம மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement