முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது

17



திருவண்ணாமலை: சத்துணவில் வழங்கப்படும் முட்டை குறித்து கேள்வி எழுப்பிய மாணவனை தாக்கிய ஊழியர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகில் உள்ள செங்குணம் கொள்ளைமேடு பகுதியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இந்த அரசுப்பள்ளியில், சத்துணவு வழங்கிய போது, ஐந்தாம் படிக்கும் மாணவனுக்கு முட்டை வழங்கப்படவில்லை. மாணவன் கேட்டதற்கு இல்லை என பணியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், சமையல் கூடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த முட்டைகளை அந்த மாணவன் கண்டுபிடித்ததுடன் அது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால், கோபமடைந்த சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாள் ஆகியோர், வகுப்பறைக்குள் புகுந்து மாணவனை துடைப்பத்தால் தாக்கி உள்ளனர். மாணவன் கதறி ஓடிய போதும், ஆசிரியர்கள், சக மாணவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.


மாணவர்களை திட்டி உள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் மொபைல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனையடுத்து லட்சுமி மற்றும் முனியம்மாள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


இந்நிலையில், லட்சுமி மற்றும் முனியம்மாள் மீது பிஎன்எஸ் 131 மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போளூர் போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Advertisement