அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி: அமித்ஷா அறிவிப்பு

82

சென்னை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணி அமைத்து சந்திக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.


@1br@தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி நிச்சயம் அமையும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். ஆனால் தேர்தலுக்கும், கூட்டணிக்கும் இன்னும் காலம் இருக்கிறது, யாருடன் கூட்டணி என்பதை அப்போது அறிவிப்போம், நிச்சயம் வலுவான கூட்டணி அமையும் என்று இ.பி.எஸ்.,சும், அ.தி.மு.க., முக்கிய தலைவர்களும் கூறி வந்தனர்.

Tamil News
Tamil News
Tamil News
சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருந்த போதே கடந்த மாதம் 25ம் தேதி இ.பி.எஸ்., டில்லிக்கு தனியாக சென்றார். அப்போது, டில்லியில் புதிதாக கட்டப்பட்ட கட்சி அலுவலகத்தை பார்க்கச் செல்கிறேன் என்று அவர் நிருபர்களிடம் கூறினார். (இந்த அலுவலகத்தை அவர் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் ஏற்கனவே திறந்து வைத்துவிட்டார்)

சந்திப்பு



அவர் சென்ற அதே நாளில், அடுத்தடுத்து, எஸ்.பி,வேலுமணி, கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் டில்லிக்கு பறந்தனர். இ.பி.எஸ், தம்பிதுரை, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர். 2 மணிநேரம் நீடித்த இந்த சந்திப்புக்கு பின்னர் இ.பி.எஸ்., இது குறித்து நிருபர்களை சந்திக்காமலே சென்றுவிட்டார்.


பின்னர் சென்னை திரும்பிய இ.பி.எஸ்., அமித் ஷாவை சந்தித்து தமிழக பிரச்னைகள் குறித்து தெரிவித்துவிட்டு வந்தோம், தமிழக நலன்களுக்காக சில கோரிக்கைகளை வைத்துவிட்டு வந்திருக்கிறோம். இப்போது என்ன தேர்தலா நடக்கிறது? பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருக்கிறோம் அல்லது இல்லை என்று சொல்வதற்கு இதுநேரம் இல்லை, கூட்டணி குறித்து பேச இன்னமும் காலம் இருக்கிறது என்றார். இதன் பிறகு, அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் டில்லி சென்று அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை



இந்நிலையில், இன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து பேசினார். இதன் பிறகு, அவரை பாஜ., நிர்வாகிகள், த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்டோரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மதியம் நடப்பதாக இருந்த அமித் ஷாவின் பத்திரிகையாளர் சந்திப்பு நேரம் தள்ளி சென்று கொண்டு இருந்தது. பிறகு மாலையில் இ.பி.எஸ்., அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

இ.பி.எஸ்., தலைமை



அப்போது அமித் ஷா கூறியதாவது; அனைவருக்கும் பங்குனி உத்தர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ, தலைவர்களும், அ.தி.மு.க., தலைவர்களும் ஒன்றாக இணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளார்கள். அடுத்து வரும் தேர்தலை தே.ஜ., கூட்டணியுடன் இணைந்து சந்திப்போம்.
இந்தத் தேர்தலை தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் இ.பி.எஸ்., தலைமையிலும் சந்திப்போம். 1998 ம் ஆண்டு முதல் பா.ஜ.,வும் அ.தி.மு.க.,வும் தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகிறது. இது இயல்பான கூட்டணி. ஜெயலலிதா காலம் முதல் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் 30 இடங்களில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. வரும் தேர்தலில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.




பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வேலுமணி, கே பி முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement