'தேர்தல் பத்திர நிதியை பறிமுதல் செய்ய உத்தரவிட முடியாது'

1

புதுடில்லி: தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகள் திரட்டிய, 16,518 கோடி ரூபாயை பறிமுதல் செய்ய உத்தரவிட முடியாது என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனிநபர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது வழக்கம். இதற்கு மாற்றாக, கடந்த 2018-ல் தேர்தல் பத்திரம் திட்டத்தை மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்தது.

நன்கொடை



இதன்படி, பெயர் தெரிவிக்காமல், யார் வேண்டுமானாலும், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியும்.

இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வு கடந்த ஆண்டு பிப்ரவரியில் தீர்ப்பளித்தது.

அதில், தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், பத்திர விற்பனை செய்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை யார், யாருக்கு எவ்வளவு பணம் கிடைத்தது என்ற விபரத்தை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பை தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவை தேர்தல் பத்திரம் வாயிலான நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்தன.

அதன்படி, பா.ஜ., - காங்., உட்பட நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகள், மொத்தம் 16,518 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் வாயிலாக திரட்டியது தெரிந்தது.

இதையடுத்து, தேர்தல் பத்திரம் வாயிலாக திரட்டிய பணத்தை அரசியல் கட்சிகளிடம் இருந்து பறிமுதல் செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணான திட்டம் என்பதால், அது தொடர்பாக நீதிமன்ற மேற்பார்வையில் விரைவாக விசாரணை நடத்தி, பணத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் மனுக்களில் கூறப்பட்டது.

ஆனால், அனைத்து மனுக்களையும் கடந்த ஆண்டு ஆக., 2-ல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் முடிவை மறு பரிசீலனை செய்யக்கோரி, கெம் சிங் பாதி என்பவர் உட்பட மனுதாரர்களில் சிலர், மேல்முறையீட்டு மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.

மறு பரிசீலனை



இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில், நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

தீர்ப்பில், 'தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகள் பெற்ற நிதியை பறிமுதல் செய்வதற்கு எதிராக, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்ய முடியாது.

'இது தொடர்பான மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுபோல, இதே விவகாரம் தொடர்பான மனுக்கள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் அந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

Advertisement