யு.பி.ஐ., சேவை பாதிப்பு: கூகுள்பே, போன்பேயில் பணபரிமாற்ற சிக்கல்: பயனர்கள் அவதி

3


புதுடில்லி: ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் யு.பி.ஐ., சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பயனர்கள் சிரமம் அடைந்தனர்.

இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகின்றன.


இந்நிலையில், இன்று ( ஏப்ரல் 12) காலை 11.30 மணி முதல் யு.பி.ஐ., (டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றம்) சேவையை இந்த செயலிகளில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தியா முழுவதும் உள்ள டிஜிட்டல் பயனாளர்கள் பணத்தை பரிமாற்றம் செய்ய முடியாமல் தவித்தனர்.



யு.பி.ஐ., பணப் பரிமாற்றம் செலுத்த முடியவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். நண்பகல் வரை 1,168 புகார்கள் வந்துள்ளன. அவற்றில், கூகுள் பே பயனர்கள் 96 சிக்கல்களைப் புகாரளித்தனர். யு.பி.ஐ., செயல்பாடுகளை மேற்பார்வையிடும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) தற்போது இடைவிடாத தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், இது யு.பி.ஐ., பரிவர்த்தனைகளில் ஓரளவு சரிவை ஏற்படுத்துவதாகவும் ஒப்புக்கொண்டது.


சிக்கலைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயனர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என என்.பி.சி.ஐ., தெரிவித்துள்ளது.

Advertisement