காட்டுமன்னார்கோவிலை டெல்டா பகுதியில் சேர்க்க பரிசீலனை

சென்னை:''காட்டுமன்னார் கோவிலை, டெல்டா பகுதி யில் சேர்ப்பது குறித்து, வேகமாக அரசு சிந்தித்து வருகிறது,'' என, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - கிரி: திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணை, 1957ல் கட்டப்பட்டது. அங்குள்ள சுற்றுலா மாளிகை, சிதிலம் அடைந்துள்ளது. அதற்கு மாற்றாக, புதிய சுற்றுலா மாளிகை கட்ட வேண்டும் அல்லது பழைய கட்டடத்தை புனரமைத்து தர வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: சாத்தனுார் அணையில், விருந்தினர் இல்லம் கட்ட அரசு, 5 கோடி ஒதுக்கியுள்ளது. விரைவில் பணிகள் எடுத்துக் கொள்ளப்படும்.

அ.தி.மு.க., - மகேந்திரன்: திருப்பூர் மாவட்டம், ஆனைமலை - நல்லாறு திட்டம் பற்றி, நீர்வளத் துறை அமைச்சர் முழுமையாக அறிந்தவர். இது முக்கியமான திட்டம். முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: எம்.எல்.ஏ., எப்படி சொல்கிறாரோ, அப்படியே எடுத்துக் கொள்கிறோம்.

வி.சி., - சிந்தனைச்செல்வன்: காட்டுமன்னார்கோவில் தொகுதி லால்பேட்டையில், நீர்வளத்துறை ஆய்வு மாளிகை உள்ளது. இதன் அருகில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது.

ஆய்வு மாளிகையை புதுப்பித்து, இந்த இடத்தில் பூங்கா அமைத்து தர வேண்டும். வீராணம் ஏரி மேற்கு பகுதியில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியை, டெல்டா பகுதியாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக, ஏற்கனவே கோரிக்கை வைத்துஉள்ளேன்.

அமைச்சர் துரைமுருகன்: கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியை, காவிரி டெல்டாவாக அறிவிப்பது குறித்து, அரசு வேகமாக சிந்தித்து வருகிறது. நானும் அந்த எண்ணத்தில் இருக்கிறேன். எனவே, காட்டுமன்னார்கோவில் பகுதி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement