சிரோமணி அகாலி தள தலைவராக மீண்டும் தேர்வானார் சுக்பீர் பாதல்

சண்டிகர்: ஐந்து மாத இடைவெளிக்கு பிறகு, சிரோமணி அகாலி தள தலைவராக சுக்பீர் பாதல் மீண்டும் தேர்வாகி உள்ளார்.
எஸ்.ஏ.டி., எனப்படும் சிரோமணி அகாலிதளம் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 524 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுக்பீர் பாதல் முதன்முதலில் 2008ல் தனது தந்தையும் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலுக்குப் பிறகு, தலைவராகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர், கடந்த ஆண்டு அந்தப் பதவியை ராஜினாமா செய்யும் வரை அவர் கட்சியை வழிநடத்தி வந்தார்.
பஜ்ராவில் உள்ள குருத்வாரா சாகிப், புர்ஜ் ஜவாஹர் சிங் வாலாவில் (பரித்கோட்) நடந்த ஒரு அரசியல் நிகழ்வில் சீக்கிய மதக் கோட்பாடுகளை, அவமதித்ததாகவும், மத நிந்தனை செய்ததாகவும்
சுக்பீர் பாதல் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவரை ராஜினாமா செய்யும்படி சீக்கிய மதத்தின் உயர் அமைப்பான அகால் தக்த் உத்தரவிட்டது. அதன்படி அவர் ராஜினாமா செய்தார். அவருக்கு மத வழக்கப்படி தண்டனையும் வழங்கப்பட்டது. அதையும் அவர் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றினார். தண்டனையை ஏற்றுக்கொண்டு குருத்வாராவில் அவர் வாயிற் காவலனாக பணியாற்றிய போது, அவரை சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
இந்நிலையில் 5 மாத இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சிரோமணி அகாலி தள தலைவராக தேர்வாகி உள்ளார். கட்சியினரின் முழு ஆதரவுடன் அவர் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

