உத்திரமேரூரில் புறவழிச்சாலை பணி மந்தம் தொடரும் போக்குவரத்து நெரிசலால் அவதி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் காஞ்சிபுரம் சாலை, வந்தவாசி சாலை, எண்டத்தூர் சாலை, புக்கத்துறை சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளன.

இந்த சாலைகளை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தோர் உத்திரமேரூரில் உள்ள கடைகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு தினமும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருவோர் தங்களுடைய வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, சாலையோரங்களில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், ஜல்லி, எம்.சான்ட் ஏற்றிச்செல்லும் லாரிகளும் நகருக்குள் வருவதால் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால், வாகன ஓட்டிகள் குறித்த நேரத்திற்கு அலுவலகம், வீடுகளுக்கு செல்ல முடியாமல் நெரிசலில் தவிக்கின்றனர். உத்திரமேரூரில் தொடர்ந்து ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, உத்திரமேரூருக்கு வெளியே புறவழிச்சாலை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, 2013ம் ஆண்டு தமிழக சட்டசபையில் உத்திரமேரூரில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக 2013 - - 14 நிதி ஆண்டில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 7 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து, புக்கத்துறை சாலையில் உள்ள ஏ.பி.சத்திரத்தில் இருந்து மல்லிகாபுரம் வழியாக வந்தவாசி சாலையில் உள்ள வேடபாளையம் வரை, 4.2 கி.மீ., துாரத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, நிலம் அளவீடு பணி நடந்தது.

பின், அதே ஆண்டில் இரண்டாவது கட்டமாக, 26.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. இதையடுத்து, 2022 -- 23 நிதி ஆண்டில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது.

இந்நிலையில், பெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகியவற்றால், சாலை அமைக்கும் இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து இருந்ததால், பணி நடப்பது தடைப்பட்டது. தற்போது, சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

புறவழிச்சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. உத்திரமேரூரில் தினமும் 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்கு உள்ளாகி வருகிறோம்.

எனவே, புறவழிச்சாலை அமைக்கும் பணியை துறை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement