கொடைக்கானல் செல்ல மாற்றுப் பாதை கீழடிக்கு நடை மேம்பாலம்
சென்னை:''கொடைக்கானல் செல்வதற்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்தும், கீழடி பகுதியில் நான்கு வழிச்சாலையை கடக்க நகரும் படிக்கட்டுகளுடன் நடை மேம்பாலம் அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது,'' என, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: சேலம் - கொச்சி நெடுஞ்சாலையில், கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
அமைச்சர் வேலு: இந்த சாலை பராமரிப்பு பணி, 2032ம் ஆண்டு வரை எல் அண்ட் டி நிறுவனத்திடம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த சாலையில், ஆறு இடங்களில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த சாலையை, மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசு கூட்டம் நடத்தியது. அப்போது, 199 கோடி ரூபாய் கொடுத்தால் சாலையை ஒப்படைப்பதாக, எல் அண்ட் டி நிறுவனம் கூறியது. அதை தருவதற்கு மத்திய அரசும் ஒப்புக் கொண்டது.
இது தொடர்பான கோப்பு, சமீபத்தில் என்னிடம் வந்தது. அனுமதி கையெழுத்து போட்டு கொடுத்துள்ளேன். மாநில அரசிடம் சாலையை ஒப்படைத்தால், விரிவாக்கம் செய்து பராமரிப்போம்.
தி.மு.க., - தமிழரசி: சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியம் செல்ல, நான்கு வழிச்சாலையை கடக்கும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையை கடப்பதற்கு நகரும் படிக்கட்டுடன் நடை மேம்பாலம் அமைத்து தர வேண்டும். இதற்காக திட்ட மதிப்பீடும் நில அளவீடும் செய்யப்பட்டு உள்ளது.
அமைச்சர் வேலு: கீழடி அருங்காட்சியகத்திற்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும். அப்படியே சென்றாலும், கீழடி முதல் பிரதான சாலை வரை, சாலை குறுகலாக உள்ளது. விரிவுபடுத்த, அருகில் உள்ள இடங்களை கையகப்படுத்தும் படி, மாவட்ட கலெக்டரிடம் கூறியுள்ளோம்.
நகரும் படிக்கட்டுடன், நடை மேம்பாலம் அமைப்பது குறித்து, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிதி நிலைமைக்கு ஏற்ப பணிகள் மேற்கொள்ளப்படும்.
தி.மு.க., - செந்தில்குமார்: சர்வதேச அடையாளமாக இருக்கும் கொடைக்கானல், கடுமையான நெருக்கடியில் உள்ளது. வார நாட்களில் மூன்று, நான்கு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மாற்று பாதை அமைக்க வேண்டும். இதற்காக அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த பணி எந்த நிலையில் இருக்கிறது?
அமைச்சர் வேலு: இந்தியா முழுதும் இருந்து உள்ள சுற்றுலா பயணியர் கொடைக்கானல் வருகின்றனர். சீசனில் வாகனங்கள் உள்ளே செல்வதற்கு பல மணி நேரம் ஆகிறது. மாற்று பாதை அமைப்பதற்கு, நானே நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். இப்போது பொறியாளர்களை அழைத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கூறியுள்ளேன். பணிகள் நடந்து வருகின்றன. அது முழுமை அடைந்தவுடன், எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது தெரியும். இதுகுறித்து முதல்வரிடம் பேசி, நடப்பாண்டு இப்பணிக்கு முக்கியத்துவம் தரப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
மேலும்
-
வக்ப் மசோதாவுக்கு ஆதரவு எதிரொலி; நிதிஷ் கட்சியில் இருந்து 5வது முக்கிய தலைவர் விலகல்
-
பணப்பையை பறித்து சென்ற போலீஸ் எஸ்.ஐ.,சஸ்பெண்ட்
-
பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை: 4000 போலீசார் பாதுகாப்பு
-
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முழுமையாக குடிநீர் வினியோகம் செய்ய மக்கள் எதிர்பார்ப்பு
-
நகைக் கடன் பெற புதிய விதிகள்: ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு
-
சேத்துாரில் வெட்டப்படும் சாலையோர மரங்கள்