உயர் மட்ட மேம்பாலம் இல்லாமல் விவசாயிகள் அவதி: விரைந்து அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே பவுஞ்சிபட்டிலிருந்து புதுப்பட்டுக்கு செல்ல முஸ்குந்தா ஆற்றின் நடுவே உயர்மட்ட மேம்பாலம் மற்றும் போதிய சாலை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பவுஞ்சிபட்டு ஊராட்சி, குமாரமங்கலம் கிராமத்தை இணைத்து ஒரே ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயம் முதன்மை தொழில்.
இப்பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு, நெல், சோளம், தர்பூசணி உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்குள்ள விவசாய நிலத்தில் மக்கள் வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். பவுஞ்சிபட்டு, காட்டு கொட்டாய் பகுதியில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த நிலையில் இங்கிருந்து விவசாய விளை பொருட்களை புதுப்பட்டு, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல போதிய சாலை வசதிகள் இல்லை.
வேதனை
அதுமட்டுமில்லாமல் கல்வராயன் மலையில் உருவாகி, சுத்தமலை அருகே, தென்பெண்ணையில் கலக்கும் முஸ்குந்தா ஆறு, இந்த பகுதி வழியாக செல்கிறது. இதனால், மழைக்காலங்களில் இப்பகுதி மக்கள் புதுபட்டு மற்றும் சங்கராபுரத்திற்கு செல்ல, முஸ்குந்தா ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இதனால் மழை வெள்ள காலங்களில் ஆற்றைக் கடக்க முடியாமல், 10 கிலோ மீட்டர் தூரம் மக்கள் சுற்றிச் செல்கின்றனர்.
பாதிப்பு
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இந்த பிரச்னை தொடர்பாக, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகளிடம், பொதுமக்கள் பல ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை, உரிய நடவடிக்கை இல்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக, மாணவர்கள் மிக அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இங்கிருந்து பள்ளி மாணவர்கள் புதுப்பட்டில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு மழைக்காலங்களில் செல்வது மிகவும் சிரமமாக இருக்கும்' என்றனர்.
பவுஞ்சிப்பட்டு புதுப்பட்டு செல்லும் சாலையின் நடுவே செல்லும் முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும்
-
அதிக பயணிகளை கையாண்டு பெங்களூரு விமான நிலையம் சாதனை; இதோ புதிய தகவல்
-
கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை
-
மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
-
போலீசிடம் தப்பிக்க முயற்சி; ரவுடிக்கு கால் எலும்பு முறிவு
-
ரவுடி சகோதரர்கள் குண்டாசில் கைது
-
சப் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி; பண்ருட்டி அருகே ரவுடி உள்ளிட்ட 4 பேர் கைது