வன உரிமைச்சான்று: கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் தகுதியுள்ள மலைவாழ் மக்களுக்கு வனஉரிமைச் சான்று வழங்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கல்வராயன்மலையில் வன உரிமைச்சான்று வழங்கும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், கள ஆய்வின்போது கண்டறியப்பட்ட அதிகளவிலான பரப்புகள், புல எண்கள் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆலோசனை செய்து, வன உரிமைச் சான்று தொடர்பான பணிகளை பிழையின்றி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண பட்டா தொடர்பான பணிகளை பல்வேறு குழுக்கள் அமைத்து விரைவாக மேற்கொள்ள வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் வன உரிமைச் சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி, ஆர்.டி.ஓ., லுார்துசாமி, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் சுந்தரம், தனி தாசில்தார் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement