கொல்லிமலையில் மிளகு மகசூல் பாதிப்பு

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், 6,500 ஏக்கரில் மிளகு சாகுபடி நடக்கிறது. இங்கு, மிதமான தட்பவெப்பம் காரணமாக, மிளகு வளர்ச்சிக்கு ஏற்ற இடமாக உள்ளது. ஆண்டுதோறும், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பூ வைக்கும் சீசன் துவங்கும்.

தொடர்ந்து, பிப்ரவரி, மார்ச்சில் அறுவடைக்கு தயாராகும். கொல்லிமலையில், 14 பஞ்சாயத்துகள் உள்ளன. அதில், அரியூர்நாடு, வளப்பூர்நாடு, குண்டூர்நாடு பஞ்சாயத்துகளில் அதிகளவில் மிளகு விளைகிறது. கடந்தாண்டு, 1 கிலோ மிளகு, 600 -- 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

நடப்பாண்டு பருவநிலை மாற்றம், கடந்த டிசம்பர் வரை தொடர் மழையால் மகசூல் பாதித்து, 40 சதவீதம் உற்பத்தி சரிந்துள்ளது. இதனால், 1 கிலோ மிளகு, 700 -- 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி கூறியதாவது:

மிளகு பல்லாண்டு பயிர். கொல்லிமலையில் கடந்தாண்டு, 1,000 டன் மிளகு உற்பத்தியான நிலையில், இந்தாண்டு மகசூல் குறைந்து, 40 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது. உலகளவில் மிளகு உற்பத்தி, மூன்று ஆண்டுகளில் 20 சதவீதம் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement