பொன்னேரியில் மீடியன் சேதம் நீட்டிய கம்பிகளால் விபத்து அச்சம்

பொன்னேரி:பொன்னேரி - மீஞ்சூர் நெடுஞ்சாலை, மீடியனுடன் இருவழி சாலையாக அமைந்துள்ளது. இச்சாலை வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. தொழில் நிறுவனங்கள் உள்ள பகுதிகள் மற்றும் சாலை சந்திப்புகளில் கனரக வாகனங்கள் திரும்பும்போது, மீடியன்கள் சேதமடைகின்றன.

அவை, உடனுக்குடன் சீரமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு ஆளாகின்றனர். பொன்னேரி அரசு கலைக்கல்லுாரி அருகே, மீடியன்களுடன் இருவழிசாலை துவங்கும் பகுதி அமைந்துள்ளது.

இந்த இடத்தில் எந்தவொரு எச்சரிக்கை பதாகையும் இல்லாததால், வாகனங்கள் அதில் மோதி விபத்தில் சிக்குகின்றன. அதேபோல், இலவம்பேடு பகுதியில் தனியார் கன்டெய்னர் கிடங்கிற்கு செல்லும் வாகனங்களால், மீடியன் பகுதி சேதமடைந்து உள்ளது.

இந்நிலையில், சேதமடைந்த மீடியன்களில், இரும்பு கம்பிகள் வெளியில் நீட்டி கொண்டிருக்கின்றன. இந்த கம்பிகளால் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயநிலை உள்ளது.

எனவே, சேதமடைந்த மீடியன்களை சீரமைக்கவும், தேவையான இடங்களில் ஒளிரும் விளக்குகள் பொருத்தவும், நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement