நிழற்குடை சுத்தம் செய்யும் பணி களத்தில் குதித்த வங்கனூர் மக்கள்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வங்கனுாரில், 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆர்.கே.பேட்டையில் இருந்து வங்கனுார் வழியாக மத்துார், புச்சிரெட்டிபள்ளி, பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு சாலை வசதி உள்ளது.

ஆனால், எந்தவொரு பேருந்தும் இந்த மார்க்கத்தில் இயக்கப்படுவது இல்லை. இதனால், இச்சாலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட நிழற்குடைகள் பயனின்றி வீணாகி வருகின்றன.

பயனில்லாத இந்த நிழற்குடைகளில் இரவு, பகல் என, எந்நேரமும் மதுபிரியர்கள் மற்றும் சமூக விரோதிகள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நிழற்குடைகள் சீரழிந்து வருகின்றன. மேலம், போஸ்டர் ஒட்டும் இடமாகவும், காலி மதுபாட்டில்களின் குப்பை கிடங்காகவும் மாறியுள்ளன.

இதனால், அதிருப்தியில் இருந்த வங்கனுார் பகுதிவாசிகள், நேற்று கிராமத்தில் உள்ள பேருந்து நிழற்குடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையும் கிழித்து அகற்றினர்.

100 நாள் வேலையில் சேர்க்கலாமே!

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், சாலையோர செடிகளை அகற்றுதல், நீர்வரத்து கால்வாய்களை துார் வாருதல் என, ஆண்டு முழுவதும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணியில், கிராமத்தில் உள்ள நிழற்குடைகளை பராமரிக்கும் பணியையும் சேர்க்கலாமே என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement