குழாய் பதிக்கும் திட்டம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி
சென்னை:கோவை மாவட்டம் இருகூர்,- கர்நாடகாவின் தேவங்கோந்தி இடையே, எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவை மாவட்டத்தை சேர்ந்த சுமதி, சண்முகசுந்தரம் உள்பட நான்கு பேர் தாக்கல் செய்த மனு:
கோவை இருகூர் -- கர்நாடகாவின் தேவங்கோந்தி இடையே, 300 கி.மீ.,க்கு மேல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பி.பி.சி.எல்., எனும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின், எண்ணெய் குழாய் பதிக்கும் திட்ட அதிகாரியால், கடந்தாண்டு நவ., 24ல் திருப்பூரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
திட்டத்தால் தொழில் துறை வளர்ச்சி பெறும் என, அறிவித்துள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்தும், 'பெட்ரோநெட்' நிறுவனம், விவசாயிகளுக்கு பல்வேறு உறுதிகளை அளித்து வருகிறது. இது ஒருபோதும் நிறைவேற்றப்படாது.
திட்டத்துக்கு நிலங்களை வழங்கும் விவசாயிகள், தங்கள் நிலங்களை பயன்படுத்த, பல்வேறு கட்டுபாடுகள் நிறுவனத்தால் விதிக்கப்படுகின்றன. இந்த திட்டத்தால் சமூக, பொருளாதார ரீதியாக, விவசாயிகள் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்; சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை.
ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கும், இந்த புதிய திட்டத்துக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. விவசாயிகள், நில உரிமையாளர்கள், மக்கள் மத்தியில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு, உரிய பதில் அளிக்கப்படாமல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, பி.பி.சி.எல்., நிறுவனம் தரப்பில், 'கொச்சி, கோவை,- கரூர் மார்க்கத்தில் பதிக்கப்பட்ட எண்ணெய் குழாய், கடந்த 22 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தால், விவசாய நிலங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தற்போது வெளியான அறிவிப்பு, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் திட்டத்துடன் தொடர்புடையதே. புதிய திட்டம் அல்ல. இந்த திட்டத்தை எதிர்த்து, ஏற்கனவே தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன' என தெரிவிக்கப்பட்டது.
பி.பி.சி.எல்., தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, இந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும்
-
170 கி.மீ., ஆன்மிக பாத யாத்திரையை நிறைவு செய்தார் ஆனந்த் அம்பானி!
-
ஐதராபாத் அணி பேட்டிங்; குஜராத் அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு
-
வேலூர் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று சதம் அடித்தது வெயில்!
-
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகைக்கடை வைத்து கொடுத்து உதவிய அறக்கட்டளைக்கு பாராட்டு
-
முதல்வர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்; அண்ணாமலை
-
ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் அதிகாரி குற்றவாளி; பெண் போலீஸ் கொலை வழக்கில் தீர்ப்பு