தமிழகத்திற்கு கூடுதல் கிருஷ்ணா நீர் வினாடிக்கு 284 கன அடி நீர்வரத்து

ஊத்துக்கோட்டை:"சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஒப்பந்தப்படி, கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், தற்போது தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 1,300 கன அடி நீர் திறக்கபபட்டு உள்ளது. இதில், 500 கன அடி நீர் திருப்பதி குடிநீர் தேவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மீதமுள்ள, 800 கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

ஆனால், தமிழகத்திற்கு வினாடிக்கு, 110 கன அடி மட்டுமே வந்து கொண்டிருந்தது. காளஹஸ்தி அருகே, 88வது கி.மீ., தொலைவில் கால்வாய் பணி நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிந்ததால், தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா நீரின் அளவு அதிகரித்துள்ளது.

நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டில் வினாடிக்கு, 284 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து தமிழக நீர்வள ஆதாரத்துறை அதிகாரி கூறுகையில், 'ஆந்திராவில் கால்வாய் பணி நிறைவுபெற்றதாலும், விவசாய பணிக்கு நீர் நிறத்தப்பட்டதாலும், தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பூண்டி நிலவரம்



நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தில், மொத்த கொள்ளளவான 3.23 டி.எம்.சி.,யில், 2.530 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 35 அடி. தற்போது 33 அடியாக உள்ளது.

இங்குள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக வினாடிக்கு, 350 கன அடி நீர் திறக்கப்பட்டு, சென்னை புழல் நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது. கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 260 கன அடி வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement