விலை சரிவால் சாகுபடி செய்யாத விவசாயிகள்; பண்ணைகளில் பல லட்சம் தக்காளி நாற்றுக்கள் வீண்

உடுமலை:தக்காளி விலை சரிவு காரணமாக, பறிக்காமல் வயல்களிலேயே வீணாகி வரும் நிலையில், இரு மாதமாக, விவசாயிகள் சாகுபடி செய்யாததால், நாற்றுப் பண்ணைகளில், பல லட்சம் நாற்றுக்கள் வீணாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தக்காளி சாகுபடி, பிரதானமாக உள்ளது. ஆண்டு முழுவதும், சராசரியாக, 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகளை, பல்வேறு மாவட்டங்கள், கேரளா மாநில வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

வெளிமாநில வரத்து அதிகரிப்பு, வியாபாரிகள் வருகை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், உடுமலை சந்தையில், கடந்த இரு மாதமாக, தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

நேற்று, 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 120 ரூபாய்க்கு மட்டுமே விற்றது. இதனால், பறிப்பு கூலி, போக்குவரத்து செலவு கூட கட்டுபடியாகாததால், பெரும்பாலான விவசாயிகள், காய்களை பறிக்காமல், வயல்களிலேயே விட்டுள்ளனர். தக்காளி சாகுபடி ஏமாற்றியதால், கடந்த இரு மாதமாக, தக்காளி நடவு மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.

இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், 'ஆண்டு முழுவதும், செடி, கொடி முறையில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அதிலும், தை, மாசி, பங்குனி மாதங்களில், மற்ற பகுதிகளில், சாகுபடி இல்லாத நிலையில், உடுமலை பகுதிகளில் சாகுபடி அதிகரித்து, மார்க்கெட்டிற்கு வரத்தும் அதிகரிக்கும்.

இரு மாதமாக, உரிய விலை கிடைக்காததால், தக்காளி பறிக்காமல் வயல்களிலேயே வீணாகி வருகிறது. இதனால், ஏக்கருக்கு, 40 முதல், 70 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.

பண்ணைகளில் முடக்கம்



உடுமலை, சுற்றுப்பகுதிகளில், 36 நாற்றுப்பண்ணைகள் உள்ளன. விவசாயிகளுக்கு தேவையான நாற்றுக்கள், இப்பண்ணைகளில், 23 நாட்கள் வரை வளர்த்தப்பட்டு, ஒரு நாற்று, ரகத்திற்கு ஏற்ப, 60 பைசா முதல் ஒரு ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏக்கருக்கு, 10 ஆயிரம் தக்காளி நாற்றுக்கள் வரை, தேவை உள்ள நிலையில், ஒவ்வொரு நாற்றுப் பண்ணைகளிலும், 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.

வழக்கமான சாகுபடியை எதிர்ப்பார்த்து, நாற்றுக்களை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் நடவு செய்ய ஆர்வம் காட்டாததால், ஒவ்வொரு பண்ணையிலும், பல லட்சம் நாற்றுக்கள் வீணாகி உள்ளது. இதனால், அடுத்து இரு மாதத்தில், தக்காளி விலை உச்சம் தொடும் வாய்ப்புள்ளளது என, நாற்றுப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement