பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு

1

சென்னை:அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கடந்தாண்டு டிசம்பரில், கோட்டூரை சேர்ந்த, தி.மு.க., அனுதாபி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.

அது தொடர்பான வழக்கை, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது.

இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்தது. அதை பரிசீலித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கின் விசாரணையை, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

தற்போது வழக்கு விசாரணை, அல்லிக்குளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவுக்காகநேற்று, வழக்கு விசாரணைக்கு வந்தது. மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, 'போக்சோ' வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் விசாரணைக்குவந்தது. குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை, போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர்.

அப்போது, 'தனக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை; எனவே, தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்' என, ஞானசேகரன் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை, நாளைக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Advertisement