மின் வாரிய சிறப்பு முகாமில் 1,976 புகார் மனுக்களுக்கு தீர்வு

சென்னை:மின் கட்டணம், குறைபாடு உடைய மீட்டர், சேதமடைந்த மின் சாதனங்கள், குறைந்த மின்னழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, தமிழக மின் வாரியம் சார்பில், முதல் முறையாக மாநிலம் முழுதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

அதன்படி, 178 செயற்பொறியாளர் அலுவலகங்களிலும், நேற்று காலை, 11:00 மணிக்கு சிறப்பு முகாம்கள் துவங்கின. முகாமில் மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர், பிரிவு அலுவலக உதவி பொறியாளர்கள் பங்கேற்றனர்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், மயிலாப்பூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமை, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், அண்ணா நகர், பல்லாவரம் போன்ற இடங்களில் நடந்த முகாம்களை, மின் பகிர்மான இயக்குனர் மாஸ்கர்னஸ் ஆய்வு செய்தனர். மாநிலம் முழுதும் மாலை வரை நடந்த முகாம்களில், மொத்தம், 11,022 புகார் மனுக்கள் பெறப்பட்டன. அதில், மின் கட்டணம் தொடர்பாக பெறப்பட்ட, 1,394 மனுக்களில், 675க்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

குறைபாடு உடைய மீட்டர் தொடர்பாக பெறப்பட்ட, 371 மனுக்களில், 203; மின் கம்பம் குறித்து பெறப்பட்ட, 2,278ல், 18; மின்னழுத்த பிரச்னை தொடர்பாக பெறப்பட்ட, 1,532 மனுக்களில், 12க்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதுகுறித்து, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை:

பெயர் மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக, 5,447 உட்பட மொத்தம், 11,022 புகார்கள் பெறப்பட்டன. உடனடியாக, 1,976 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. பழுதடைந்த மீட்டர்கள் வரும் செவ்வாய் கிழமைக்குள் மாற்றப்படும். பழுதான மின் கம்பங்கள், 15 நாட்களுக்குள் மாற்றப்படும். மின் கட்டண வேறுபாடு குறித்த புகார்களுக்கு, ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement