டில்லி உஷ்ஷ்ஷ்: அடக்கி வாசிக்கும் கேரள பா.ஜ.,

8

திருவனந்தபுரம்: மோகன்லால் நடிப்பில், சமீபத்தில் வெளியான எம்புரான் மலையாள திரைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டது. 'நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கிய இந்த படம், ஹிந்துக்களுக்கு எதிராக உள்ளது. மோடி முதல்வராக இருந்தபோது நடந்த குஜராத் கலவரம் குறித்து தவறுதலாக சொல்லப்பட்டுள்ளது' என, விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தவிர, மோகன்லால் ஒரு அறிக்கையும் வெளியிட்டு, 'வெறுப்பை உண்டாக்குவது என் நோக்கமல்ல' என மன்னிப்பும் கோரினார்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பத்திரிகையான, 'ஆர்கனைசர்' வெளியிட்டுள்ள செய்தியில், 'இயக்குநர் பிருத்விராஜ் மற்றும் படத்தின் கதாசிரியர் முரளி கோபி ஆகியோர் ஹிந்துக்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள்' என கடுமையாக சாடியது. 'பல காட்சிகள் நீக்கப்பட்ட பின்னும், எம்புரான் திரைப்படம் ஹிந்துக்களுக்கு எதிராக உள்ளது' என கூறியது ஆர்கனைசர்.

ஆனால், இதற்கு எதிர்மாறாக செயல்பட்டது பா.ஜ., இக்கட்சியின் கேரள தலைவர்கள், கட்டுப்பாட்டுடன் அறிக்கை வெளியிட்டனர். பா.ஜ.,வின் திருச்சூர் மாவட்ட கமிட்டி உறுப்பினர் விஜேஷ், 'இந்த படத்தை தடை செய்ய வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 'சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ளது. இந்த படம் வெளியான பின், எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

உடனே விஜேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது பா.ஜ., அவர் கட்சியிலிருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். 'கட்சி அனுமதி இல்லாமல் எப்படி மனு தாக்கல் செய்யலாம்?' என, கேள்வி எழுப்பப்பட்டது.

அத்துடன், 'கட்சிக்கும், இந்த மனுவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது' என, கேரள பா.ஜ., அறிவித்தது. கேரளாவை பொறுத்தவரை, 'ஹிந்துத்வாவை வைத்து மட்டுமே கட்சியை வளர்க்க முடியாது' என்பது பா.ஜ.,வின் கருத்து. 'அதன் விளைவு தான், எம்புரான் விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை' என்கின்றனர் பா.ஜ.,வினர்.

Advertisement