முத்துமாரியம்மன் கோயிலில் வெடிகுண்டு வைத்ததாக புரளி
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தகவலை அடுத்து போலீசார் சோதனை செய்ததில் புரளி என தெரியவந்ததையடுத்து போனில் தகவல் சொன்னவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை 4:00 மணிக்கு கோயிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக போலீசிற்கு போனில் ஒரு நபர் தகவல் கொடுத்துள்ளார். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், டவுன் போலீசாரும் கோயிலை சோதனை செய்ததில் புரளி என தெரிய வந்தது.
போனில் தொடர்பு கொண்டவரின் அலைபேசி எண்ணை வைத்து அவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் விருதுநகரை சேர்ந்த செல்வபெருமாள், 46, என்பதும், அருப்புக்கோட்டை காசு கடை பஜாரில் உறவின் முறைக்கு சொந்தமான கட்டடத்தில் ஓட்டல் நடத்தி வந்துள்ளார் என்பதும், உறவின் முறை நிர்வாகத்தினருக்கும் அவருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையில், போலீசிற்கு பொய் தகவல் சொன்னதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.