தமிழகத்தை வீழ்த்த முடியாது: முதல்வர் ஸ்டாலின்

129

ஊட்டி: '' எத்தகைய அரசியல் சூழ்ச்சிகளாலும், தமிழகத்தை வீழ்த்த முடியாது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


ஊட்டியில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், பிறகு முடிவடைந்த பணிகளை துவக்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.


தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கூடலூரில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சியில் நீலகிரி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டது. இம்மாவட்ட வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது தி.மு.க. தான்.

இந்தியாவில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி சாதனை படைத்து உள்ளோம். நாட்டிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது.
ஊட்டியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது தூக்கத்தில் இருந்த அப்போதைய ஆட்சியாளர்களை தி.மு.க., தான் தட்டி எழுப்பியது. கடந்த ஆட்சியில் ஊட்டி மருத்துவமனைக்கு எந்த பணிகளும் நடக்கவில்லை.

நீலகிரி மாவட்டத்திற்கு ஆறு அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

1. நீலகிரியில் சொந்தமாக வீடு இல்லாத ஏழை மக்களுக்காக கூடலூரில் ரூ. 26.6 கோடியில் 300 வீடுகள் கொண்ட கலைஞர் நகர் அமைக்கப்படும்.


2. பழங்குடி மக்களின் வாழ்வியலை தெரிந்து கொண்டு காட்சிப்படுத்தவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும், ரூ.10 கோடி செலவில் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.


3. நீலகிரி இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு கழிக்கும் வகையில், எங்கும் ஏறலாம். எங்கும் இறங்கலாம் என்ற சுற்றுலா முறை ரூ.5 கோடி செலவில் 10 புதிய பேருந்துகளோடு துவக்கப்படும்

4. சுற்றுலா காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.20 கோடி செலவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி அமைக்கப்படும்.

5. நடுகாணி மரபணு தொகுதி சூழலியல் இயற்கை மையம் ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும்

6. பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் ரூ.5.75 கோடி செலவில் 23 சமுதாய கூடங்கள், நகர்ப்புறங்களில் வாழும் பழங்குடியினருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

நீலகிரியில் நடக்கும் நிகழ்ச்சியால் பாம்பனில் நடக்கும் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இதை பிரதமரிடம் தெரிவித்து விட்டேன். தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என தமிழக மண்ணில் இருந்து பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை போக்க வேண்டும். எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைந்தால், தமிழகத்தை நசுக்கிவிடுவார்கள். தமிழகத்தின் வலிமையை குறைக்க பா.ஜ., துடிக்கிறது.

வக்ப் மசோதாவை எதிர்த்து திமுக எம்.பி.,க்கள் பேசினர். ஆனால், அதிமுக தம்பிதுரை ஒரு நிமிடம் மட்டும் பேசினார். ஆனால், எதிர்க்கிறதா அல்லது ஆதரிக்கிறதா என சொல்லவில்லை. வக்ப் சட்டத்தை எதிர்த்து ஆ.ராசா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வார்.

கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கவில்லை. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., தான் நீட் தேர்வை அனுமதித்தனர். கூட்டணியில் இருந்தபோதும்,தேர்தலைசந்தித்த போதும், அப்போது நீட் தேர்வு விலக்கு வேண்டும் என ஏன் பா.ஜ.,விடம் கேட்கவில்லை. மத்தியில் இண்டியா கூட்டணி அமைந்து இருந்தால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைத்து இருக்கும்.

தமிழக மாணவர்கள் அக்கறை இருந்தால், நீட் தேர்வில் விலக்கு இருந்தால் தான் பா.ஜ., உடன் கூட்டணி என அதிமுக தயாரா ? உருப்படியாக ஒன்றும் செய்யாமல் இருப்பதால் தான் மக்களால் புறக்கணிக்கப்படுகிறீர்கள்.

சங்ககாலம் தொட்டு, குடியாட்சி காலத்திலும் கோலோச்சும் தமிழகத்தை எத்தகைய அரசியல் சூழ்ச்சியால் வீழ்த்த முடியாது. அதனை விட மாட்டேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement