கால்வாயில் வளரும் 144 மரங்கள்

மதுரை : மதுரை மாடக்குளம் கண்மாய்க்கான வரத்து கால்வாயில் நீர்வழிப்பாதையை அடைத்து வளரும் 144 மரங்கள் கண்டறியப்பட்டு வருவாய்த்துறை, வனத்துறையால் வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீர்வளத்துறையின் கீழ் மாடக்குளம் கண்மாய் கரைகள் சீரமைப்பு, நடைபாதை, வரத்து கால்வாய் துார்வாருதல் உட்பட பல்வேறு பணிகளுக்கான ரூ.17.53 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்பு, வணிகவளாகங்கள் கடந்த மாதம் அகற்றப்பட்டன.

அச்சம்பத்து, ஏற்குடி, துவரிமான் பகுதிகளில் உள்ள ஒரு கிலோமீட்டர் நீள வரத்து கால்வாயில் புளி, துாங்குமூஞ்சி வாகை, அரசு வேம்பு, தென்னை, நெட்டிலிங்கம், ஆலமரம், இலவமரம், நாவல், உதிய மரம், புங்கன், தேக்கு, மா, பனை என 144 மரங்கள் வளர்கின்றன. மாவட்ட வனத்துறையின் கீழ் 111 மரங்களுக்கும் 33 மரங்கள் தோட்டக்கலைத்துறை மூலம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மரங்களை அகற்றுவதற்கு தாசில்தார் பரிந்துரை செய்துள்ளதன் அடிப்படியில் நீர்வழிப்பாதையை அடைத்துள்ள மரங்கள் அகற்றப்படும். அதன் பின் வாய்க்காலின் இருபக்க கரையைப் பலப்படுத்தி அப்பகுதியின் கழிவுநீர் வராமல் கான்கிரீட் சுவர் எழுப்பப்படும்.

கால்வாய் குப்பை கொட்டாமல் தடுக்க கம்பிவேலி அமைக்கப்படும். ஆறுமாதங்களுக்குள் பணிகளை முடிக்க நீர்வளத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement