பள்ளியில் பெயர்ந்து விழும் கூரை சித்திரெட்டிபட்டியில் மாணவர்கள் அச்சம்

திருமங்கலம்: திருமங்கலம் ஒன்றியம் சித்திரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டடத்தில் ஓடுகள் பெயர்ந்து விழுவதால் உயிர் பயத்தில் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கின்றனர்.

இந்தப் பள்ளியில் 100க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இப் பள்ளியின் 2 கட்டடங்கள் பழுதடைந்தன. எனவே ரூ.பல லட்சம் செலவில் ஒரு கட்டடத்தை பராமரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து அக்கட்டடத்தை முழுமையாக சோதனை செய்த அதிகாரிகள், அதனை பயன்படுத்த தகுதியற்றது என தெரிவித்தனர்.

எனவே 3 மாதங்களுக்கு முன்பு கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டது. அதன்பின் புதிய கட்டடத்திற்கு அதிகாரிகள் முயற்சி எடுக்கவில்லை.

அதன் அருகில் இருந்த கட்டடத்தில் ஓடுகள் சேதமடைந்து அடிக்கடி பெயர்ந்து விழுந்ததால், கசிவு ஏற்பட்டு மழைநீரால் வகுப்பறை நனைந்தது. தண்ணீர் கசிவதை தவிர்க்க 'அருமையான' திட்டம் தயாரித்த அதிகாரிகள் ரூ. 2 லட்சம் செலவில் ஓடுகளின் மீது தார்ப்பாய் கொண்டு மூடினர். அதன்பின்னும் ஓடுகள் பெயர்ந்து விழுந்து வந்ததால் மாணவர்கள் அச்சமடைந்தனர். நேற்று முன்தினம் கனமழை பெய்தபோது, வகுப்பறைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் நேற்று மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து படிக்காமல், மரத்தடியில் அமர்ந்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா கூறுகையில், ''புதிய கட்டட அனுமதிக்காக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கும். ஓடுகள் உடைந்து நொறுங்கும் வகையில் உள்ளது.

மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என்றார். பள்ளி குழந்தைகளை பாதுகாக்க புதிய கட்டடத்திற்காக முயற்சிக்க வேண்டும்.

Advertisement