நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

42


சென்னை: ''நீட் தேர்வு தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ஜ., பங்கேற்காது'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: நீட் தேர்வு வந்த பிறகே, தமிழகத்தில் சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும், மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். ஆனால், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டிருக்கிறது தி.மு.க.,

தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தாங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் எப்படி பணம் விளையாடுகிறது என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், இன்னும் நீட் எதிர்ப்பு என்று பல நாடகங்கள் நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்படி ஒரு நாடகமான இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழக பா.ஜ., பங்கேற்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பாக, தமிழக மக்கள் சார்பில், தமிழக பா.ஜ., கேட்டிருந்த பல கேள்விகளுக்கு, தி.மு.க., அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விகளை மீண்டும் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்வைக்க விரும்புகிறேன். நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்தியது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.


நீட் தேர்வு வேண்டாம் என்று தி.மு.க., அரசுக்கு எண்ணம் இருக்குமேயானால், நீங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். டாஸ்மாக் ஊழல் விசாரணைக்குத் தடை கேட்டும், கள்ளச்சாராய மரணம் குறித்த விசாரணையைத் தடுக்கவும் நீதிமன்றம் செல்லும் உங்கள் அரசு, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள்?


நீட் தேர்வு குறித்து தி.மு.க., கூறுவது உண்மை நிலவரத்துக்கு நேர்மாறாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான எந்த ஆதாரங்களையும் இதுவரை முன்வைத்திருக்கிறீர்கள்? நீட் தேர்வு வந்த பிறகே, மருத்துவக் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.


நீட் தேர்வினால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு என்று பொய் சொல்லும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில், நீட் தேர்வு இல்லாத, 2007 - 2016ம் காலகட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 38 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே, மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றனர் என்ற உண்மையை மறைப்பது ஏன்?


நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் 8 பேர், தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்கள். தமிழகத் தேர்ச்சி விகிதம், தேசிய சராசரியை விட அதிகம் என்பது முதலமைச்சருக்குத் தெரியாதா? யாரை ஏமாற்ற இன்னும் நீட் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்?

கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்தில் 14 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்வி இடங்கள், கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் மேலும் பல மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.



நீட் தேர்வு மட்டுமல்ல, எந்தத் தேர்வானாலும் நமது மாணவர்கள் சாதனை படைக்கும் திறமை வாய்ந்தவர்கள். ஆண்டுதோறும் நீட் தேர்ச்சி விகிதமே இதற்கு சாட்சி. போதும் முதலமைச்சர் அவர்களே நீட் எதிர்ப்பு என்ற பெயரில், நீங்கள் ஆடும் சுயநல நாடகம். எனவே, இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement