எழுச்சி பெறுமா சென்னை அணி: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை

2

முல்லன்புர்: சென்னை அணிக்கு இன்று பஞ்சாப் சோதனை காத்திருக்கிறது. இதில் அசத்தினால், வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.


பஞ்சாப், முல்லன்புர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப்பை எதிர்கொள்கிறது
.தேறாத 'டாப்-ஆர்டர்': சென்னை அணி முதல் போட்டியில் மும்பையை சாய்த்தது. பின் 'ஹாட்ரிக்' தோல்வியை சந்தித்தது. பேட்டிங் 'கிளிக்' ஆகவில்லை. 180 ரன்னை 'சேஸ்' செய்ய முடியாமல் தவிக்கிறது. முதல் 10 ஓவரில் 65/4 (எதிர், பெங்களூரு), 74/3 (எதிர், ராஜஸ்தான்), 69/4 (எதிர், டில்லி) என விரைவாக விக்கெட் சரிவது பலவீனம். துவக்கத்தில் ரச்சின், கான்வே அசத்த வேண்டும். கேப்டன் ருதுராஜ் அவசரப்பட கூடாது. 'மிடில் ஆர்டரில்' ஷிவம் துபே 'வலிமை' காட்டினால், வெற்றியை ருசிக்கலாம். விஜய் சங்கர், வேகமாக ரன் சேர்க்க வேண்டும். கடைசி கட்டத்தில் ஜடேஜா கைகொடுத்தால் நல்லது.


தோனி எதிர்காலம்: 'தல' தோனிக்காகவே ரசிகர்கள் மைதானத்திற்கு வருவர். களமிறங்கும் போது 'விசில்' சத்தம் பறக்கும். ஆனால், டில்லிக்கு எதிராக ஆமை வேகத்தில் ஆடிய இவர், நம்பிக்கையை இழந்தார். தோனி 43, என்ற தனி ஒரு வீரரைவிட சென்னை அணியே பெரிது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. பிரிமியர் அரங்கில் 10 போட்டிகளில் 5 முறை தோனியை அவுட்டாக்கியுள்ளார் சஹால். இன்று இவரது 'சுழலை' கவனமாக சமாளிக்க வேண்டும். 'தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை' என அறிவித்துள்ள தோனி, மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வேண்டும்.வேகப்பந்துவீச்சில் கலீல் அகமது, பதிரனா, 'சுழலில்' நுார் அகமது, அஷ்வின், ஜடேஜா அசத்தலாம்.


மிரட்டும் ஷ்ரேயாஸ்: பஞ்சாப் அணி ஆலோசகர் பாண்டிங், ஷ்ரேயாஸ் தலைமையில் எழுச்சி கண்டுள்ளது. குஜராத், லக்னோவை வீழ்த்தியது. கடந்த போட்டியில் ராஜஸ்தானிடம் வீழ்ந்தது. ஏலத்தில் ரூ. 26.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஷ்ரேயாஸ் முதல் போட்டியில் 97 ரன் (42 பந்து, எதிர் குஜராத்) விளாசினார். 2 அரைசதம் உட்பட 159 ரன் எடுத்து, நல்ல 'பார்மில்' உள்ளார். நேஹல் வதேரா, பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஓமர்சாய் சஷாங்க் சிங் ரன் மழை பொழிவது பலம்.
மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், பெர்குசன், ஜோஷ் இங்லிஸ் போன்ற 'மேட்ச் வின்னர்'கள் உள்ளனர். பந்துவீச்சில் யான்சென், அர்ஷ்தீப் சிங் மிரட்டலாம்.

யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 30 போட்டியில் மோதின. சென்னை 16, பஞ்சாப் 14ல் வென்றன.
* முல்லன்புர் மைதானத்தில் முதல் முறையாக மோத உள்ளன.
* வானம் தெளிவாக காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை.

* ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது.


ஈடனில் மோதல்
இன்று மதியம் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா, லக்னோ அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, அட்டவணைப்படி ஏப். 6ல் நடக்க வேண்டியது. அன்று ராமநவமி என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement