மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருக்குதா; செயலியில் கணக்கெடுக்கும் மாநகராட்சி

கோவை; கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில், மொபைல் செயலி மூலம் ஒவ்வொரு கட்டடத்திலும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கிறதா என 'சர்வே' எடுக்கப்படுகிறது.

கோவை மாநகராட்சி பகுதியில், நிலத்தடி நீர் செறிவூட்டும் நோக்கத்துக்காக, பல்வேறு வழிமுறைகளில் மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வீடுகள், வணிக நிறுவனங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தும் நோக்கத்துக்காகவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காகவும், 'மொபைல் செயலி' மூலமாக, கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு, 'சர்வே' செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் உள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை சீரமைப்பதற்கும், புதிதாக அமைப்பதற்கும் நேரில் ஆய்வு செய்து தன்னார்வலர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.

மாநகராட்சி மண்டல அலுவலகங்களில், மழை நீர் சேகரிப்பு தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement