கிடுக்கிப்பிடி கேள்விகளால் துளைத்தெடுத்த பொதுமக்கள்

1

போத்தனூர்; கோவை, செட்டிபாளை யம் சாலையில், மாநகராட்சி கழிவுநீர் பண்ணை வளாகத்திலுள்ள உரக்கிடங்கு பகுதியில், நேற்று மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது. இதில், 99வது வார்டு கவுன்சிலர் அஸ்லாம் பாஷா கலந்து கொண்டார்.

அப்போது, வெள்ளலூர் குப்பைகிடங்கு எதிர்ப்பு குழு கூட்டமைப்பை சேர்ந்த பெண்கள் அங்கு வந்தனர். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பாதிப்பு குறித்து கூறினர். கலெக்டர் புறப்பட்டுச் சென்றதும், கவுன்சிலர் அஸ்லாம் பாஷாவை சூழ்ந்து கொண்டனர்.

அவரிடம் பாதிப்புகள் குறித்தும், நேற்று முன்தினம் தாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காதது குறித்தும், கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

அதற்கு கவுன்சிலர் அஸ்லாம் பாஷா, ''எனக்கு யாரும் தகவல் தரவில்லை. ஸ்ரீராம் நகர் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு. ரிசர்வ் சைட்டே கிடையாது. குப்பை கொட்டுவது தெரிந்துதானே, பலரும் அங்கு இடம் வாங்கினர். இப்போது குப்பை கொட்டக்கூடாது என்றால் முடியாது. 30--35 ஆண்டுகளுக்கு முன்பே, இது குப்பை கொட்டுவதற்காக வாங்கப்பட்டுள்ளது. இனி இங்கு குப்பைக்கொட்டுவது குறைக்கப்படும்,'' என்றார்.

அப்போது பெண்கள், இங்கு '2018 முதல் குப்பை கொட்டக்கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளதே' என கேட்டனர். அதற்கு அவர், ''யார் சொன்னார்கள்... நீங்கள் வேண்டுமானால் வழக்கு போடுங்கள்,'' என்றார்.

அதற்கு பதிலளித்த பொதுமக்கள், கவுன்சிலரை விடாமல் தொடர்ந்து கேள்விகள் கேட்டு திணறடித்தனர். இதன் பின் அங்கிருந்து சென்றார் கவுன்சிலர்.



வாங்கப்பட்ட இடம் இது'

ஸ்ரீராம் நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்க செயலாளரும், வழக்கு தொடர்ந்தவருமான மோகன் கூறியதாவது:ஸ்ரீராம் நகர் வீட்டு மனைகள், கடந்த தி.மு.க., ஆட்சியிலேயே அங்கீகாரம் செய்யப்பட்டு விட்டது. டில்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை அமர்வு, 2018 மார்ச் மாதம் வேறிடத்தில் குப்பைக்கழிவை கொட்ட உத்தரவிட்டது. இதுகுறித்து, கவுன்சிலருக்கு தெரியாததால்தான் கோர்ட்டில் வழக்கு தொடர கூறியுள்ளார். இதனை பார்க்கும்போது, தற்போது வழக்கு நடப்பதாவது தெரியுமா என, சந்தேகமாக உள்ளது.பொது பிரச்னைகளுக்கு பதில் கூறும்போது, அதுகுறித்த அனைத்து தகவல்களையும் மக்கள் பிரதிநிதி (கவுன்சிலர்) தெரிந்து வைத்திருக்க வேண்டும். தற்போது குப்பைக்கழிவு கொட்டுமிடம் உள்பட, 630க்கும் அதிகமான பரப்பு கொண்ட இவ்விடம், அக்காலத்தில் கழிவுநீரை சேகரித்து, மாநகராட்சியால் வளர்க்கப்பட்ட மாடுகளுக்கு, தேவையான புல் வளர்க்க வாங்கப்பட்டதாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement