வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை



சென்னை: 'தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில், தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதன் அறிக்கை:



தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, மதுரை எழுமலை ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழை பெய்துள்ளது.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தலா 7; விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, நாமக்கல் எருமைப்பட்டி, தேனி மாவட்டம் சண்முகாநதியில் தலா 6 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில், நேற்று காலை 8:30 மணிக்கு, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அத்துடன், தென்கிழக்கு வங்கக்கடலில் இருந்து, தென்மேற்கு வங்கக்கடல் வழியாக, தமிழக தென்மாவட்டங்கள் வரை, ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி, மின்னலுடன், மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்டங்களில், ஒரு சில இடங்களிலும், காரைக்காலிலும் இன்று கனமழை பெய்யலாம். இந்த நிகழ்வால், 13ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை தொடரலாம்.

எனினும், தமிழகத்தில் இன்றும், நாளையும், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பான அளவை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக வேலுாரில் 101 டிகிரி பாரன்ஹீட், அதாவது 38.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

சேலம், திருப்பத்துாரில் தலா 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் வாட்டியது.

Advertisement