'பஞ்சம்' இல்லா குறைகள்; குறைவில்லா மக்கள் மனுக்கள்

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். நடவடிக்கை எடுப்பதற்காக அம்மனுக்கள், துறைசார்ந்த அரசு அலுவலர்கள் வசம்ஒப்படைக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி தர்ணா
தாராபுரம் தாலுகா, கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது யூசுப், 57. மாற்றுத்திறனாளி. இவர், மனைவி மும்தாஜ் பேகம் மற்றும் மகளுடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில், அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். முகமது யூசுப் கூறியதாவது:
மாற்றுத்திறனாளியான எனக்கு, கடந்த 2022ல், பெதப்பம்பட்டி - உடுமலை ரோடு, ஜெ.ஜெ., நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது. பங்களிப்பு தொகை, 1.70 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில், 2023, ஜூன் மாதம், 70,700 ரூபாயை செலுத்தினேன். வறுமை காரணமாக, மீதம் ஒரு லட்சம் ரூபாயை என்னால் செலுத்த இயலவில்லை. எனது மூத்த மகள் கல்லுாரியிலும், இளைய மகள் பிளஸ் 2 படிக்கின்றனர். மனைவியின் சிறிய வருமானம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை நம்பியே வாழ்க்கையை நகர்த்துகிறோம். ஒரு லட்சம் ரூபாயை தள்ளுபடி செய்து, ஒதுக்கீடு செய்த வீட்டை வழங்க வேண்டும்.
கல்லறைத்தோட்டம் தேவை
திருப்பூர் புதிய கிறிஸ்தவ போதகர்கள் கூட்டமைப்பினர், திருப்பூர் வடக்கு பகுதியில், வள்ளிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, க.ச.எண். 4ல் உள்ள தரிசு நிலத்தை, கல்லறை தோட்டம் அமைக்க ஒதுக்கீடு செய்யக்கோரி மனு அளித்தனர்.
சாலை அகலமாகட்டும்
அவிநாசி அடுத்த நம்பியாம்பாளையம் அருகே, ஆலங்காட்டுபாளையத்தில் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, ரோட்டை அகலப்படுத்த கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.
பள்ளிக்கு தேவை சுற்றுச்சுவர்
திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு, வாய்க்கால் மேடு பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் அளித்த மனு:
வாய்க்கால்மேடு அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஒட்டி பி.ஏ.பி., வாய்க்கால் செல்கிறது. மழைக்காலங்களில் கால்வாயில் அதிக தண்ணீர் திறந்துவிடப்படும்போது, மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
கடந்த ஐந்து மாதங்கள் முன், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துவிட்டது. பள்ளி குழந்தைகள், கழிப்பிடம் செல்லமுடியாமல் தவிக்கின்றனர். வாய்க்கால் பகுதி புதர்களில் இருந்து விஷ ஜந்துக்கள், பள்ளி வளாகத்துக்குள் நுழை கின்றன. புதிய சுற்றுச்சுவர் அமைத்து, மாணவர்களின் பாதுகாப்பைஉறுதி செய்ய வேண்டும்.
கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு
தாராபுரம் தாலுகா சின்னக் காம்பாளையத்தில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திவரும் கோழிப் பண்ணையை அகற்றகோரி அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அளிக்கப்பட்ட மனுவுக்கு, 'சின்னக்காம்பாளையம் கோழிப்பண்ணைக்கு தொழில்நுட்ப அனுமதி வழங்கப்படவில்லை' என, நகர ஊரமைப்பு இயக்குனர் பதில் அளித்துள்ளார். எனவே, கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரி, நேற்று, பொதுமக்கள்சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மின் இணைப்பு இல்லை
இடுவாய் ஊராட்சி, திருவள்ளுவர் நகர் பகுதி மக்கள்அளித்த மனு:
திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி, திருவள்ளுவர் நகரில் 35 குடும்பங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். பட்டா இல்லாததால், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. பள்ளி செல்லும் குழந்தைகளும், முதியவர்களும் சிரமப்படுகின்றனர்.
மாணவர்கள் தெரு விளக்கு ஒளியில் படிக்க வேண்டியுள்ளது. பட்டா இல்லாத எங்கள் வீடுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கவேண்டும்.
குடியிருக்கும் இடத்தில் பட்டா வழங்க வேண்டும். நேற்று குறைகேட்பு கூட்டத்தில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி,பொதுமக்கள் 673 மனுக்கள் அளித்தனர்.
மேலும்
-
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
-
ஐகோர்ட் நீதிபதிகள் 769 பேர்; சொத்து விவரம் வெளியிட்டது 95 பேர்!